2009-01-17 11:45:33

வன்னிப் பகுதியில் இடம் பெறும் சண்டை உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வன்னியில் மக்களுக்குச் சேவை செய்யும் கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் அழைப்பு


ஜன.17,2009. இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம் பெறும் கடும் மோதல்களினால் அப்பாவி மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வரும் வேளை, இவ்வுணர்வற்ற சண்டை உடனடியாக நிறுத்தப்பட்டு போரிடும் தரப்புக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாறு வன்னிப் பகுதியில் மக்களுக்குச் சேவை செய்யும் கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் இனச் சண்டைக்கு மனிதாபிமான, நீதியான மற்றும் நிலைத்த அரசியல் தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்கு முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் மனு சமர்ப்பித்துள்ளனர்.

வன்னிப் பகுதியின் கத்தோலிக்க குருக்கள் மற்றும் துறவிகள் சார்பில் இம்மனுவில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர், தொடர்ந்து நடைபெறும் சண்டைக்கானக் காரணங்களையும் அதில் விளக்கியுள்ளார்.

சிங்களவர்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை அரசு பல ஆண்டுகளாக இலங்கை தமிழருக்கு மாண்பையும் சமத்துவத்தையும் அளிக்க மறுப்பதும் அநீதியான அமைப்பு முறையுமே இதற்கான காரணங்களாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4 91 00 பேர் புலம் பெயர்ந்து தற்சமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில்

வாழ்கின்றனர்.

மேலும், மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனிதாபிமானத் தேவைகளை வழங்குவதில் இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா தொடர்ந்தும் செயற்படுமென்றும், இதனடிப்படையில் நான்கு கோடி பெறுமதியான இரண்டாவது கட்ட மனிதாபிமானப் பொருட்களை அனுப்பிவைக்க தீர்மானித்திருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.