2009-01-17 11:48:20

தாய்மைப் பேற்றின் போது ஏற்படும் இறப்புகள் ஏழ்மையோடு தொடர்புடையவை, யூனிசெப்


ஜன.17,2009. குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது உலக அளவில் பெண்களுக்குப் பெரும் நலவாழ்வு பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது, இது குறிப்பாக மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளிலுள்ள பெண்களுடைய வாழ்வில் உண்மையாக இருக்கின்றது என்று யூனிசெப் என்னும் ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு கூறியது.

கர்ப்ப காலம் அல்லது குழந்தை பிறப்பின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை வளரும் நாடுகளிலுள்ள பெண்களைவிட மிக ஏழை நாடுகளில் முன்னூறு தடவைகள் அதிகம் என்று யூனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

உலகின் சிறாரின் நிலைமை என்ற தலைப்பில் யூனிசெப் வெளியிட்ட 2009ம் ஆண்டின் பிரசுரமானது, ஒரு சிறுமி கருத்தரிக்கும் போது எவ்வளவுக்கு வயது குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவளது நலவாழ்வும் ஆபத்தை எதிர்நோக்குகிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

உலகில் தாய்மைப் பேற்றின் போது ஏற்படும் இறப்புகள், 15க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட எழுபதாயிரம் சிறுமிகள், இளம் பெண்கள் உட்பட ஐந்து இலட்சத்தையும் தாண்டிவிட்டன.

2007ம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குறைந்தது 92 இலட்சம் குழந்தைகள் இறந்தன. எனினும் இது 2006ம் ஆண்டைவிட குறைவு. 2006ல் 97 இலட்சம் குழந்தைகள் இறந்தன என்று யூனிசெப்பின் தற்போதைய அறிக்கை கூறுகிறது.

உலகில் தாய்மைப் பேற்றின் போது ஏற்படும் இறப்புகளில் 95 விழுக்காடு ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் இடம் பெறுகின்றன.

உலக அளவில் சட்டரீதியான திருமண வயதை எட்டுவதற்கு முன்பே, பெண் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும் போக்கு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெப் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இவ்வாரத்தில் வெளியிடப்பட்ட உலக அளவிலான சிறார் நிலமைகள் குறித்த யூனிசெப் அமைப்பின் அறிக்கையில் இந்தியாவில் 45 விழுக்காட்டுப் பெண்கள், சட்டப்பூர்வ திருமண வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் மகப்பேறு காலத்தில் இறக்கும் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம் என்றும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் இதனால் இந்தியாவில் அதிகமாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது








All the contents on this site are copyrighted ©.