2009-01-14 15:32:24

வன்னிப்பகுதியில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடிமக்களின் இருப்பிடங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட யாழ்ப்பாண ஆயர் அழைப்பு


ஜன.14,2009. இலங்கையின் வன்னிப்பகுதியில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடிமக்களின் இருப்பிடங்களில் நடத்தப்படும் விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு அந்நாட்டு அரசுத்தலைவர் மகிந்த ராஷபக்சேவுக்கு உருக்கமான விண்ணப்பத்தை விடுத்துள்ளார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

சண்டை கடுமையாய் இடம் பெறும் பகுதிகளின் புலம் பெயர்ந்துள்ள மற்றும் அங்கு வாழும் அப்பாவி மக்கள் பரந்தன்-முல்லைத்தீவு எ35 சாலையிலும், தர்மபுரம் மற்றும் புதுக்குடியிருப்புக்குமிடையே அதிகமாகப் புகலிடம் தேடியுள்ளனர், இவ்விடங்களில் தொடர்ந்து நடத்தப்படும் விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பலர் தினமும் இறக்கின்றனர், இன்னும் பலர் காயமடைகின்றனர் என்று யாழ்ப்பாண ஆயர் கூறியுள்ளார்.

வன்னிப் பகுதியின் நிலைமையை விளக்கி இலங்கை அரசுத்தலைவர் ராஷபக்சேவுக்கு ஆயர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விண்ணப்பத்தைத் தாழ்மையுடன் முன்வைப்பதாகக் கூறியுள்ளதோடு இந்த விமானக் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தக் கோரி நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்பாக அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அவசர கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இச்செவ்வாயன்று நடத்தினர்.

உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும், தமிழ் மக்கள் மீதான படுகொலை நிறுத்தப்படவேண்டும், இதன் தார்மீகப் பொறுப்பு சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வேக்கு உண்டு போன்ற முழக்கங்களையும் இதில் ஈடுபட்ட மக்கள் எழுப்பினர்

 








All the contents on this site are copyrighted ©.