2009-01-14 18:03:25

எங்கே நிம்மதி - நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஜனவரி, 14 .


தமிழகத்தில் நாம் பொங்கல் ,தமிழ்ப் புத்தாண்டு , உழவர் திருநாள் , வள்ளுவர் தினம் என விழாக்கோலத்தில் இருக்கிறோம் .

வாழ்நாளெல்லாம் உழைக்கும் நாம் இளைப்பாறுதல் வேண்டும் . உடல் நலத்தைப் பாதிக்கும் ஒரு காரணி மன அழுத்தம் , மனக் கவலை , மன அரிப்பு , உளைச்சல் போன்றவை . மன அழுத்தத்தை வெற்றி கொள்ள முதல்படி ஓய்வாக இளைப்பாறுதல்தான் . நம்முடைய மன அழுத்தத்தினை மாற்ற நல்ல வழி அமைதியையும் ஓய்வையும் தரும் ஒரு பொழுதுபோக்குச் செயலுக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குவதாகும் . இசைக்கருவியை மீட்டியோ , இசையினைக் கேட்டு மகிழ்ந்தோ மகிழ்ந்திருக்கலாம் . இசை நல்ல மன அமைதியைத் தரக்கூடியது . அதேபோல தோட்டவேலை , நல்ல நூல்களைப் படித்தல் , நல்ல உரை கேட்டல் , நல்ல நண்பர்களோடு பேசி மகிழுதல் போன்றவைகளில் ஏதாவது உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காய் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் . விழாக்காலங்களில் உறவினர்களைச் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தலாம் . அது குழந்தைகளுக்கு மிகவும் நலமானதாகும் . விளையாட்டுத்திடலுக்குச் சென்று குழந்தைகளை விளையாடச் சொல்லலாம் . நீங்களும் இளமையாக இருந்தால் விளையாட்டில் கலந்து கொள்ளலாம் . நடைப்பயிற்சி செய்யலாம் .

இன்னொரு நல்ல வழிமுறை – தினமும் உங்களுக்கென்று தனிமையில் சிறிது நேரம் ஒதுக்குவது . இந்த நேரத்தில் எதையும் யோசிக்காமல் , செய்யாமல் அமைதியாக இருக்கப் பழகுங்கள் . உங்கள் கண்களை மூடி அமர்ந்திருங்கள் . ஆழமாகச் சுவாசியுங்கள் . இதமான தனிமையில் ஆனந்தமான சூழலில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள் . இந்த நேரத்தை முழுமையாக அனுபவிக்க முயற்சி செய்யுங்கள் .



அடுத்து மனம் திறந்து பேசக்கூடிய நம்பிக்கைக்குரிய ஒருவரைக் கண்டுபிடியுங்கள் . உங்களில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி நிறைந்த அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . அவருக்குச் சம அளவு நேரம் கொடுங்கள் .ஏனெனில் யாருமே மறுக்கப்பட்ட உணர்ச்சிகளைக் கொட்டும் தொட்டியாக இருக்க விரும்புதில்லை .

இயற்கையினூடோ நடந்து செல்லுங்கள் . மலர்களில் நறுமணத்தை நுகருங்கள் . ஆறு ,ஏரி , கடல் இவற்றில் அலைகள் பேசும் குரலுக்குச் செவிசாயுங்கள் . நட்டத்திரக்கூட்டங்களின் அழகினை ரசியுங்கள் .

நல்ல கவிதை நூல்களைப் படியுங்கள் . திரும்பத் திரும்பப் படியுங்கள் . விவிலியம் , மற்றும் உங்களுகுப்பிடித்தமான திருநூல்களையும் தவறாது படியுங்கள் . மனதுக்கு ஆறுதலாக இருக்கும் . வள்ளுவருக்கு விழா எடுத்துள்ளோம் . நல்ல விளக்கம் தரும் பொழிப்புரை நூல் ஒன்றை வாங்கி வள்ளுவரைக் கருத்தாய்ப்படியுங்கள் .

வாழ்கையில் அண்மைக்காலத்தில் வந்த சோதனையை , சவாலை , துயரம் தரும் நிகழ்ச்சியை எண்ணிப்பாருங்கள் . அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் எனச் சிநதியுங்கள் .எல்லாப் புயலுக்கும் இக்கட்டிற்கும் ஒரு சாதகமான நல்ல பக்கம் ஒன்று உண்டு .

தினசரி உங்கள் அனுபவங்களை நாட்குறிப்பேட்டில் எழுதுங்கள் . உங்கள் நினைவுகள் , உணர்வுகள் , தேவைகள் போன்றவை அதில் இடம் பெறட்டும் .

உங்களுக்குப் பிடித்த நல்ல நகைச் சுவைத் துணுக்குகளை எண்ணி சிரித்து மகிழுங்கள் . நகைச்சுவைக்கு ஓய்வளிக்கும் சக்தியுண்டு . வத்திக்கான் வானொலி போன்ற நல்ல நிகழ்ச்சிகளைத் தரக்கூடிய வானொலி , தொலைக்காட்சி போன்றவற்றைப் பயன்படுத்தி ஓய்வைப் பெற வழிசெய்யுங்கள் .



இறுதியாகச் செபிப்பதை மறக்கவேண்டாம் . தமிழர்கள் பொங்கல் விழாவையும் உழவர் திருநாளையும் , புத்தாண்டையும் கொண்டாடுவதன் காரணம் கடவுளுக்கு நன்றி கூறுவதற்கே . செபிப்பது கடவுளுக்கு நன்றி கூறுவதோடு புது வரங்களைப் பெற்றுமகிழவும் மனதுக்கு நிம்மதியும் கொடுத்து வாழ்வை வளமாக்கும் .

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான பொங்கல் விழா , புத்தாண்டு விழா , உழவர் திருவிழா மற்றும் வள்ளுவர் தின வாழ்த்துக்கூறி மகிழ்ந்திருந்து நல்ல ஓய்வினைப் பெற்று பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துகிறோம் .








All the contents on this site are copyrighted ©.