2009-01-12 09:58:48

காஸாவில் வன்முறை நிறுத்தப்படுமாறு அனைத்து ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகளின் அவை வலியுறுத்தல்


ஜன.10,2009. காஸாவில் வன்முறை நிறுத்தப்படுமாறு எஎசிசி என்ற அனைத்து ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகளின் அவையும் வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் இடம் பெறும் மோதல்கள் அச்சம் தருவதாய் உள்ளன என்றுரைக்கும் அவ்வவையின் அறிக்கை, போரிடும் குழுக்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு கேட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சாசனம் வெளியிடப்பட்டதன் அறுபதாம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கழித்து காஸாவில் வன்முறை தொடங்கியிருக்கிறது என்றுரைக்கும் அவ்வறிக்கை, காஸாவில் இடம் பெறும் சம்டை கடவுளால் கொடுக்கப்பட்ட மனித உரிமைகளைக் கடுமையாய் மீறுவதாக இருக்கின்றது என்று கூறுகிறது.

எந்தப் பிரச்சனைக்கும் சண்டை ஒருபோதும் தீர்வாக இருக்க முடியாது, மாறாக பேச்சுவார்த்தை மூலமே தீர்வைக் காண முடியும் என்பதை வரலாறு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகளின் அறிக்கை கூறுகிறது.

எஎசிசி என்ற அமைப்பில் 40 ஆப்ரிக்க நாடுகளின் 173 கிறிஸ்தவ சபைகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 12 கோடி கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

காஸாவில் கடந்த டிசம்பர் 27ம் தேதி தொடங்கிய மோதல்களில் 560க்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.