2009-01-12 15:22:19

கத்தோலிக்க கல்வி பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் பியோ லாகி இறைபதம் அடைந்தார்


ஜன.12,2009. திருப்பீடத்தின் கத்தோலிக்க கல்வி பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் பியோ லாகி இறைபதம் அடைந்ததையொட்டி தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கர்தினால் பியோ லாகி தனது பணி வாழ்வில் ஆற்றிய பெரும் செயல்களைப் பாராட்டியுள்ளதோடு அவரது ஆன்மா நிறை சாந்தி அடைவதற்கானத் தமது செபங்களையும் அவரின் குடும்பத்தினருக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

நோயின் காரணமாக உரோம், சான் கார்லோ தி நான்சி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்த கர்தினால் பியோ லாகியின் அடக்கச் சடங்கு இச்செவ்வாய் காலை தூய பேதுரு பசிலிக்காவில் நடைபெறும். இதனை கர்தினால் குழுவின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ நடத்துவார். இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தையும் வந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

86 வயது பூர்த்தியாக இன்னும் சில மாதங்களே உள்ள வேளை இறைவனடி எய்திய இத்தாலிய கர்தினால் லாகி, 1993ம் ஆண்டிலிருந்து மால்ட்டா பக்த வீரர் அமைப்பின் ஆர்வலராக இருந்து வருகிறார். இவர், 1990 முதல் 1999 வரை கத்தோலிக்க கல்வி பேராயத் தலைவராகப் பணியாற்றினார். 2001ல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்குத் திருத்தந்தையின் சிறப்புத் தூதுவராகச் சென்றிருப்பவர் கர்தினால் லாகி. இவர் 1922ல் இத்தாலியின் காஸ்திலியோனில் பிறந்தவர். 1946ல் குருவான இவர், 1950ல் லாத்தரன் பாப்பிறை பல்கலைகழகத்தில் திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருத்தந்தை 2ம் ஜான் பவுலால் 1991, ஜூன் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கர்தினால் லாகியின் இறப்போடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 189 ஆகக் குறைந்தது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்கள் 116 ஆகும்.








All the contents on this site are copyrighted ©.