2009-01-12 16:04:50

இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகளை வகுக்கும்வேளை வருங்காலத்திற்கான திட்டங்களும் பலமாக இடம்பெற வேண்டும்- திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


ஜன.12,2009. இத்தாலியின் லாசியோ மாகாணத் தலைவர் பியத்ரோ மராசோ, உரோம் நகர் மேயர் ஜான்னி அலெமான், உரோம் மாகாணத் தலைவர் நிக்கோலா ஜிங்காரி ஆகியோர் இன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்த வந்த தலைவர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய உலகம் சந்தித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடிகளையும் அதனால் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளின் பாதிப்புக்களையும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகளை வகுக்கும்வேளை வருங்காலத்திற்கான திட்டங்களும் பலமாக இடம்பெற வேண்டும் எனத் தலைவர்களை நோக்கி விண்ணப்பித்த அவர், இன்றைய சூழல்களில் மக்கள் நலன் நோக்கி ஆற்ற வேண்டிய கடமைகளைக் கத்தோலிக்கர் தெளிவாக உணர்ந்துள்ளார்கள் எனவும் கூறினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பு, பங்குத்தள அமைப்புகள், கத்தோலிக்கக் குழுக்கள் போன்றவை உதவி தேவைப்படும் மக்கள் அனைவருக்கும் ஆற்றிவரும் அரும் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளுக்கு, முதியோருக்கு மற்றும் வேலையற்ற இளையோருக்கு சமூகம் உதவ வேண்டிய கடமைகளையும் இனப்பாகுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஆண்டாண்டுகளாகத் திருச்சபை ஆற்றிவரும் கல்விப் பணிகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை இதில் அரசுகளின் ஊக்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இளையோரில் நம்பிக்கையை விதைக்க வேண்டியதன் தேவையையும் திருத்தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.