2009-01-10 20:30:22

ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா மறையுரை-10, ஜனவரி ,09 .


நாம் இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம்.

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் செல்லாத ஒருவர் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடப்பது என்ன என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும் . ஒவ்வொரு ஆண்டும் திருச்சபை 52 வாரங்களுக்கான வழிபாட்டுக்குத் திட்டமிட்டிருக்கிறது .இந்த வழிபாட்டில் இயேசுவின் பிறப்பு , வாழ்க்கையில் நடந்தவை , இறப்பு , மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஆகியவைகளைப் பற்றி விளக்கிக் கூறும் வகையில் வழிபாடு இருக்கும் .

வழிபாட்டில் நற்செய்தி வாக்கு – இறைவாக்கு வாசிக்கப்படும் . மறையுறை என்னும் விளக்க உரை வழங்கப்படும் . இயேசு மரிப்பதற்கு முந்தைய இரவு இயேசு அவருடைய சீடர்களோடு உண்ட இராவுணவு மீண்டும் அவர் நினைவாக உண்ணப்படும் . செபங்கள் , பக்திப் பாடல்கள் இடம் பெறும் .

திருவருகைக்காலத்தில் கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்தோம் . மூன்று கீழ்த்திசை ஞானிகளின் வருகையோடு கிறிஸ்து பிறப்புக்காலம் நிறைவு பெற்றது .

இந்த வாரம் கிறிஸ்து அவருடைய 30 வயதில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறோம் . இயேசு திருமுழுக்குப் பெற்று தம் நற்செய்தி அறிவிப்பினைத் தொடங்குகிறார் .



இன்னும் சிறிது காலத்தில் தவக்காலம் ஆரம்பிக்கும் . 40 நாட்கள் தவமிருந்து கிறிஸ்துவின் பாடுகளையும் , உயிர்ப்பையும் பற்றித் தியானிக்கும் காலம் அது . ஆண்டில் பொதுக்காலம் முழுவதும் இயேசுவின் அற்புத நிகழ்ச்சிகள் , போதனைகள் , உறுதி மொழிகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம் .



இன்றைய வழிபாட்டில் இயேசு தமது பொதுவாழ்வை யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றுத் தொடங்குகிறார் . பாவமன்னிப்புக்காக யூதர்களிடையே இருந்த சடங்குகளில் ஒன்று திருமுழுக்கு . புறவினத்தாருக்கு இது அளிக்கப்பட்ட பொழுது அவர்களை யூத சமயத்தில் இணைக்கும் சின்னமாக அது எண்ணப்பட்டது . கிறிஸ்துவோ பாவ நிழலும் படாதவர் . புறவினத்தாரும் அல்லர் . எனவே மக்களையே புனிதப்படுத்த வந்த புண்ணிய மூர்த்திக்கு திருமுழுக்குத் தேவையில்லை. எனினும் எல்லா வகையிலும் சாதாரண மக்களைப்போல் வாழ விரும்பிய கிறிஸ்து , பாவிகளின் சார்பில் பரம தந்தையிடம் மன்னிப்புக் கேட்க வந்த கிறிஸ்து , சட்டங்களை அழிக்க அன்று , நிறைவேற்றவே வந்த கிறிஸ்து , பாவிகளின் வரிசையில் நின்று திருமுழுக்குப் பெற்றார் . மூவொரு கடவுளை இந்நிகழ்ச்சியில் சந்திக்கின்றோம் .

ஒட்டக முடி ஆடை அணிந்து , இடையில் வார்க்கச்சை கட்டி , வெட்டுக்கிளியும் , காட்டுத்தேனும் உண்டு வாழ்ந்த கடுந்தவ முனிவர் யோவான் . என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார் . அவருடைய மிதியடிவாரைக் கூட அவிழ்க்க நான் தகுதியற்றவன் . நான் உங்களுக்கு நீரால் திருமுழுக்குக் கொடுத்தேன் . அவரோ உங்களுக்குத் தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று தன் சிறுமையை ஏற்று இயேசுவின் பெருமை பாடிய பெரும் பக்தர் திருமுழுக்கு யோவான் . இவர்தான் இயேசுவுக்குத் திருமுழுக்கு அளித்தார் . திருமுழுக்கு யோவான் தயக்கத்தோடு சடங்கை நிறைவேற்றுகிறார் . வழக்கமாக உரத்த குரலில் பேசும் அவர் இன்று உணர்ச்சி வசப்பட்டுக் காணப்படுகிறார் . ஏனெனில் மெசியாவாகிய ஏசு தண்ணீரில் இறங்கியுள்ளார் . இயேசுவுக்கு திருமுழுக்குத் தேவையில்லை . ஆனால் ஏசு விரும்பினார் . தெய்வத்திருமகனின் பாதங்களைக் தொட்டபொழுதே தன்னைப் படைத்தவரை தொட்டுக் கறைப்படுத்திவிட்டோமே என்று தண்ணீர் எண்ணியிருக்கும் . எனினும் தெய்வத்திருமகனைத் தொட்டதால் தண்ணீரின் தீட்டு நீங்கி , அது புனித நீராகிவிட்டது . யோர்தான் நதி உலகின் புனித நதியாகக் கருதப்படுகிறது .



திருமுழுக்கு நமக்குத் தேவை , நாம் திருமுழுக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டும் . திரு முழுக்கால் நாம் புது வாழ்வு பெற்றுள்ளோம் . திருமுழுக்கால் நாம் திருச்சபையில் உறுப்பினர்கள் ஆகியுள்ளோம் . நாம் மற்ற கிறிஸ்தவர்களோடு இணைக்கப்பட்டுள்ளோம் . நமக்குக் கடமைகளும் உயர்வான உரிமைகளும் உள்ளன .

ஆண்டவர் திருமுழுக்குப் பெற்ற வேளையிலே வானம் திறந்தது . எதிர்பார்த்திருந்த புதுயுகம் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டும் தொடர் இது . இவரே என் அன்பார்ந்த மகன் என்பது மெசியாவைக் குறிக்கும் தொடர் . இவரிடம் நான் பூரிப்படைகிறேன் என்பது துன்புறும் ஊழியனைக் குறிக்கும் தொடர் . எனவே தந்தை தம் பிரிய மகனை நமக்காக , நமது மீட்புக்காக , இன்று அர்ப்பணிக்கிறார் . இயேசு பரம தந்தையின் மகன் . ஆனால் அவர் ஊழியன் ஆனார் . நாமோ அடிமைகள் . ஆனால் இயேசு வழியாக தந்தையின் பிள்ளைகளாகின்றோம் . தம் மகனில் விசுவாசம் கொள்ளும் எவரும் அழியாமல் முடிவில்லா வாழ்வைப் பெறும் பொருட்டு அந்த ஒரே மகனையே உலகுக்கு அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் .- யோவான் 3, 16.

நமது திருமுழுக்கு ஒரு சவால் . நமது திருமுழுக்கின் வழியாக நாமும் தேவ ஆவியாரைப் பெற்றுள்ளோம் . அந்த ஆவியாரால் நாம் கடவுளை அப்பா ,தந்தாய் எனக் கூப்பிடுகிறோம் .உரோமையர் , 8, 15 . திருமுழுக்கின் வழியாக இறைவாழ்வைப் பெறுவதால் நாம் பிள்ளைகளாக மட்டுமன்று , உரிமையாளர்களுமாய் இருக்கின்றோம் . ஆம் , நாம் கடவுளின் செல்வத்திற்கு உரிமையாளர்கள் .கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்கள் . உரோமையர். 8, 17 .

திருமுழுக்கு யோவானைப் போலவே நாமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஒருவரோடு , இயேசுவோடு தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை உணர்கின்றோம். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நாம் அருகதை அற்றவர்கள் . ஆனால் அவர் நம்மை அவருடைய வாழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் . நன்றியுள்ளவர்களாக என்றும் இருப்போம் . திருமுழுக்கு ஒருவருடைய வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியாகும் . நமது திருமுழுக்கின் வழியாக நமதாண்டவரின் அரச பண்பிலே , அவரது நித்திய குருத்துவத்திலே , இறைவாக்குப் பணியிலே பங்கு பெறுகின்றோம் .நம் திருமுழுக்கு வாக்குறுதியைப்பற்றி நாம் சிந்திக்கின்றோமா , நாள்தோறும் நாம் புதுப்பிக்கின்றோமா .





திருமுழுக்கு யோவானையும் இயேசுவையும் தூய ஆவியின் அருளால் நிரப்பிய கடவுள் உங்கள் உள்ளத்தையும் அருளால் நிரப்புவாராக .

அவர்களைத் தாங்கிய கடவுளின் கரங்கள் உங்களையும் உறுதிப்படுத்துவதாக .

அவர்களுடைய வழி நடத்திய கடவுளின் அன்பு உங்களுக்கும் ஒளியாகவும் விண்மீனாகவும் இருந்து இன்றும் என்றும் வழி நடத்துவதாக . ஆண்டவரின் அருளிலும் அமைதியிலும் மகிழ்ந்து வாழ்வீர்களாக .

 








All the contents on this site are copyrighted ©.