2009-01-07 19:11:37

திருத்தந்தையின் மறைபோதகம் - 07, புதன்கிழமை .09 .


வானம் மேகமூட்டமாகவும் மழைச் சாரலோடும் இருந்தது . தட்பவெப்பம் 5 டிகிரிக்கும் பூஜ்யத்துக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது . இருப்பினும் மக்கள் திருத்தந்தையின் மறைபோதகத்துக்கு முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுலின் அரங்கமே இடம்கொள்ளாத அளவுக்கு வருகை தந்துள்ளனர் .



பூத்து மணம் வீசும் புத்தாண்டில் அனைவருக்கும் திருத்தந்தை புத்தாண்டு தின வாழ்த்துக்களைத் தம் இதயத்திலிருந்து வழங்குவதாகக் கூறினார் . தூய பவுலின் ஜூபிலி ஆண்டில் நாம் திருத்தூதரின் கொள்கைகளைச் சிந்தித்து வந்தோம் . அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி வருகின்ற மாதங்களில் நம்முடைய மனங்களைக் கிறிஸ்துவுக்கு முழுவதுமாகத் திறந்து வைப்போம் எனக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . திருத்தூதர் உரோமையர்களுக்கு வரைந்துள்ள மடலில் நாம் காணும் உண்மையான கடவுள் ஆராதனை என்றால் என்னவென்று பார்ப்போம் என்றார் . கையால் செய்யப்படாத ஆலயமாகிய கிறிஸ்து நம்மைத் தம்மோடு இணைத்துக் கொண்டிருக்கிறார் . அவர் நம்மை உயிருள்ள பலியாக ஆக்கியுள்ளார் . இவ்வாறு அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் நம் உடல்களை , அதாவது நம்மை முழுவதும் , ஆன்மீக ஆராதனையாக கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டுகிறார் . புலனாகாத முறையில் அல்ல , மெய்யாக ஒவ்வொரு நாளும் நம்மை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறார் . இந்த மெய்யான ஆராதனை மனித முயற்சிகளால் வருவதில்லை . நாம் திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவோடு இணைந்துள்ளோம் . அவர் நம்முடைய மனித இயல்பை எடுத்துக் கொண்டார் . அதனால் நம்மை அவரோடு இணைத்துக் கொண்டுள்ளார் . அவர் நம் அனைவரையும் தம்மோடு இணைக்கும் வல்லமை கொண்டுள்ளதால் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறார் . இவ்வாறு அனைத்து உலகமும் ஒன்றிணைந்த இந்த அண்டமெல்லாம் இணைந்த வழிபாட்டுக்கு எல்லாரையும் அழைப்பதே திருச்சபையின் குறிக்கோள் . அதனால் உலகு அனைத்துமே கடவுளின் மகிமையாகிறது . தூய ஆவியானவரால் அர்ச்சிக்கப்பட்ட இறைவனுக்கு உகந்த பலியாகிறது .



மறைபோதகத்தின் இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் ஆண்டவரின் அருள்மழை மகிழ்ச்சியையும் அமைதியையும் இந்தப் புத்தாண்டு முழுவதும் தருமாறு வேண்டி , தம்முடைய அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.