2009-01-05 13:52:02

புனித பவுலின் இறைவேண்டுதல் செபம்


ஜன.05,2009 கைடு போஸ்ட்ஸ் என்ற பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் மேரி என்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பற்றிய உண்மை நிகழ்வு ஒன்றை வெளியிட்டிருந்தது. மேரி, ஆசிரியர் பணியை ஒரு புனிதப் பணியாக நினைத்தவர். எனவே தான் ஒரு நல்ல சிறந்த ஆசிரியையாக வேண்டும் என்ற அடங்கா ஆர்வம் அவரிடம் இருந்தது. ஆனால் அது நிறைவேறுவதற்குத் தடையாய் இருந்தான் பில் என்ற அவரது வகுப்பு மாணவன். அவன் வகுப்பில் செய்த அட்டகாசங்கள் மேரிக்கு நரம்புத் தளர்ச்சி நோயே வந்துவிடும் போலிருந்தது. அந்த அளவுக்கு பில் முரடனாக இருந்தான். ஒருநாள் மேரி ஆசிரியை தனது வகுப்பில் சுருக்கெழுத்தில் ஏதோ குறிப்பு எழுதி அதைப் பத்திரப்படுத்திவிட்டு பாடம் நடத்துவதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். பில், மேரிக்குத் தெரியாமல் அந்தக் குறிப்பை எடுத்து தனது புத்தகத்தில் பத்திரமாக வைத்துக் கொண்டான். இருபது வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் எதேச்சையாக அந்தக் குறிப்பு பில்லின் கண்ணில் பட்டது. மக்கிப் போன அதனை முழுவதுமாகத் தட்டச்சு செய்து வாசித்து பார்த்தான். அதில், “இறைவனே, நல்ல தந்தையே, பில்லின் உள்ளத்தை உமது அருளால் நிரப்பும். அவன் நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற முடியும் என்றிருந்தது”. அதை வாசித்த பில்லுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் தீய வாழ்விலே முழுமையாக இறங்கிவிடலாமா என்று அப்பொழுதுதான் நினைத்துக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப அதை வாசித்தான். முற்றிலும் நல்லவனாக மாறினான். தனது ஆசான் மேரிக்கு நன்றியும் தெரிவித்தான்.

அன்பர்களே, ஒரு சிறு செபத்தின் வல்லமையைப் பார்த்தீர்களா? ஆத்திகரோ நாத்திகரோ யாராக இருந்தாலும் ஒவ்வொருவரது உள்மனத்திலும் செபம், பிரார்த்தனை என்ற ஓர் இயல்நிலை இருப்பதை எவரும் மறுக்கமாட்டார். இறைவனிடமோ, பிற சக்திகளிடமோ அல்லது பிற மனிதர்களிடமோ ஏதாவது ஒரு சூழலில் அனைவருமே “செபம்” என்ற ஒரு மனநிலையில் தம்மை உட்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் செப நிலை இரண்டு வகையைக் கொண்டது. ஒன்று இறைவேண்டுதல், மற்றொன்று இறைபுகழ். இந்த முதல் வகையில்,

மன்றாடுதல், வேண்டுதல், இறைஞ்சுதல், கேட்டல், கெஞ்சுதல், அழுதல், புலம்புதல், நம்பிக்கை, பரிந்துரை

ஆகிய நிலைகளும், இரண்டாவது வகையில்,

புகழ்தல், போற்றுதல், ஏத்துதல், ஆராதித்தல், ஸ்தோத்திரத்தல், பாடுதல், இசைத்தல், நமஸ்கரித்தல், வாழ்த்துதல், நன்றி கூறுதல்

ஆகிய நிலைகளும் உள்ளடங்கும். புனித பவுலின் திருமுகங்களை வாசிக்கும் போது அவரின் செபங்கள் இந்த இரண்டு வகை நிலையைக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அன்று இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் பாரவோன் மன்னனிடம் அடிமைத்தனத்தில் மிகவும் துன்பப்பட்ட போது அம்மக்கள் ஒரு குழுமமாகச் சேர்ந்து செபித்தனர். ஆண்டவரும் அவர்களின் இறைவேண்டுதலைக் கேட்டு அவர்களை எகிப்திலிருந்து மீட்டார். புனித பவுலும் தனது மூதாதையரைப் பின்பற்றி இறைவனின் இரக்கத்திலும் பரிவிலும் பேரன்பிலும் வாக்குப்பிறழாமையிலும் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து தனது திருமுகங்களில் இறைவேண்டுதல் செய்கிறார், இறைவனிடம் செபிக்கிறார். எடுத்துக்காட்டாக, அவர் கொலோசையருக்கு எழுதிய மடலில் பிரிவு ஒன்று, சொற்றொடர் 9இல் “உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டுகிறேன்” என்றும், உரோமையர் 1,9இல், “உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன் என்றும், 2கொரிந்தியர் 13,9இல், நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம் என்றும் எழுதியிருக்கிறார். இவ்வாறு அவர் திருமடல் எழுதியுள்ள எல்லாத் திருச்சபைகளுக்கும் தனியாருக்கும் தம் வேண்டுதல்கள்வழி ஊக்கமூட்டுகிறார்.

மேலும், புனித பவுல் சில குறிப்பிட்ட நலன்களுக்காவும் நன்மைகளுக்காவும் இறைவேண்டுதல் செய்வதை அவரின் திருமடல்கள் மூலம் அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக, அவர் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாவது மடல், பிரிவு2, வசனங்கள் 16,17இல், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக என்றும், உரோமைத் திருச்சபையினருக்கு எழுதிய மடல், பிரிவு15, வசனம் 5இல், கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக என்றும், பிலிப்பி கிறிஸ்தவர்க்கு எழுதிய மடலில்,1,9-10 நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன் என்றும், கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது மடல் 13,7இல், நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம் என்றும் எழுதியிருக்கிறார்.

புனித பவுலின் இச்செபங்கள் அவர் நிறுவிய திருச்சபை மக்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவதாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்குத் தந்தை அருள்வாராக! என்று எபேசு திருச்சபையினருக்காகப் பரிந்துரைத்து செபித்த அவர், கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவார்களாக! என்றும் தந்தையிடம் வேண்டுகிறார். இதேபோல் தெசலோனிக்கத் திருச்சபை மக்களிடம் அன்பு பெருக வேண்டுமென்று செபிக்கிறார். 1தெச.3,12 ல் நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! என்று மன்றாடுகிறார். இவ்வாறு பவுலின் செபங்களில் இறைவேண்டுதல் பண்பு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

 

இன்னும், இந்த இறைவேண்டுதல் செபத்தோடு பெருந்துயர் என்ற குணத்தையும் இணைத்துக் கூறுகிறார் பவுல். விவிலிய மன்றாட்டுக்களின் அடிப்படைக் குணம் கடவுளிடம் போராடி வெல்வது என்பதை நற்செய்தி உவமைகளிலும் வாசிக்கிறோம். ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று மூன்று அப்பங்களைக் கடனாகக் கேட்கிறார். ஆனால் உள்ளே இருப்பவரோ, இந்த நேரத்தில் என்னால் தரமுடியாது என்பதற்குக் காரணம் சொல்கிறார். ஆனால் உதவி கேட்டு வந்தவர் விடுவதாயில்லை. தொடர்ந்து விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தார். எனவே வீட்டுக்காரர் தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆதலால் கேட்டுக் கொண்டேயிருங்கள், தட்டிக் கொண்டேயிருங்கள், தேடிக் கொண்டேயிருங்கள் என்ற இயேசுவின் கூற்றை நன்கு அறிந்திருந்த பவுல், தனது செபங்களிலும் இதனை வெளிக்காட்டுகிறார்.



அவர் உரோமையரிடம் 15.30- எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள் என்றும், கொலோசையரிடம், 2,1- உங்களுக்காக நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன், வேண்டுகிறேன் என்கிறார்

அன்பர்களே, நாம் இறைவனிடம் செபிக்கும் பொழுது நமக்காக மட்டுமன்றி, உலகில் சண்டையினாலும் இயற்கைச் சீற்றத்தாலும் பசி பட்டினியாலும் தீராத நோய்களாலும் கஷ்டப்படுகிறவர்களுக்காகவும் செபிக்கிறோம். இந்நாட்களில் குறிப்பாக இலங்கையில் கடும் யுத்தத்தாலும் பாலஸ்தீனாவில் கடும் தாக்குதல்களாலும் துன்புறும் அப்பாவி மக்களுக்காகச் செபிக்கிறோம். நமது திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் உலகில் பலநிலைகளில் துன்புறும் மக்களை நினைவுபடுத்தி அவர்களுக்காகத் தானும் செபிப்பதோடு நம் அனைவரையும் செபிக்குமாறு கேட்டு வருகிறார். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையிலும் புனித பூமியின் காஸாவில் நடைபெறும் மோதல்களைக் குறிப்பிட்டு அங்கு சண்டை உடனடியாக நிறுத்தப்படவும் நீதியும் அமைதியும் நிலைபெறவும் இக்குண்டு வீச்சு தாக்குதல்களில் பலியாகும் மற்றும் காயமுறும் அப்பாவி மக்களுக்காகச் செபிக்கவும் அழைப்புவிடுத்தார்.

அன்பர்களே, தாகூர் சொல்வது போல நாம் வாழ்வில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நம்மைக் காட்டிலும் பிறரைத்தான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவே ஒருவர் தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் சமூகத்திற்காகவும் இறைவேண்டுதல் செய்ய வேண்டும். ஒரு தடவை இரண்டு தடவைகள் செபித்துவிட்டு நம் செபம் கேட்கப்படவில்லையே என்று நாம் முறையிடவோ முணுமுணுக்கவோ தேவையில்லை. புனித பவுல் செய்ததைப் போல, இயேசு சொன்னது போல கேட்டுக் கொண்டேயிருகக வேண்டும், தட்டிக் கொண்டேயிருகக வேண்டும். தேடிக் கொண்டேயிருகக வேண்டும். கேட்கிறவன் பெறுகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகின்றது. தேடுகிறவன் கண்டடைகிறான்.

நமது செபத்திற்கு உடனே பலன் கிடைப்பதில்லை என்று பலநேரங்களில் புலம்புகிறோம். ஆனால் அந்தப் பலன் நமக்கு உரியது என்று இறைவன் நினைக்கும் நேரத்தில் அதனைத் தருகிறார் என்பதே உண்மை. பழங்கால வேதங்களுக்கு அறிவியல் ரீதியாக அபரிவிதமான சக்தி இருந்தது. வேத விற்பன்னர்களின் மந்திரங்களால் வானம் தவறாது பெய்தது. அக்காலக் கட்டத்தில் ஒருவர் தான் ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் செல்வத்துக்கு அதிபதியான லஷ்மி தேவியிடம் செபித்து வந்தார். பத்து வருடங்கள் ஆகியும் எந்தப் பலனும் கிட்டவில்லை. பொறுமையை இழந்த அவர் விரக்தியில் காவி உடை அணிந்து இமயமலை சென்று துறவறம் பூண்டு நீண்ட நாட்களாகத் தியானித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் கண்விழித்த போது அவர் முன்னே ஒரு பேரழகி நின்று கொண்டிருந்தாள். பெண்ணே நீ யார் என்று அவர் கேட்க, கடந்த பன்னிரண்டு வருடங்களாக நீ பூஜித்து வந்த லஷ்மி நான். உன் ஆசையை நிறைவேற்ற வந்துள்ளேன் என்றாள். அதற்கு அவர், தாயே நான் தியானித்து வருவதால் பூரண ஆனந்தத்தை அடைந்துள்ளேன். இப்போது சொத்து சுகங்களில் ஆசையில்லை என்றார். சரி. இவ்வளவு தாமதமாக வந்ததற்குக் காரணம் என்ன? என்றார். பக்தா, நீ வேதச் சடங்குகளையெல்லாம் உண்மையாகவே செய்தாய். ஆனாலும் உன்மீது நான் வைத்துள்ள அன்பும் உன் நலனில் நான் கொண்டுள்ள அக்கறையுமே இத்தாமதத்திற்குக் காரணம் என்றாள் லஷ்மி தேவி.








All the contents on this site are copyrighted ©.