2009-01-05 15:00:40

ஜிம்பாபுவே அரசுத்தலைவர் இராபர்ட் முகாபே மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆப்ரிக்க ஆங்கிலக்கன் ஆயர்கள் அழைப்பு


ஜன.05,2009. ஜிம்பாபுவே அரசுத்தலைவர் இராபர்ட் முகாபே மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்மண்டல ஆப்ரிக்க ஆங்கிலக்கன் ஆயர்கள் இணைந்து சர்வதேச சமுதாயத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

முகாபே மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காகத் தென்னாப்ரிக்க அரசை குறை கூறியுள்ள ஆங்கிலக்கன் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, அரசுத்தலைவர் பதவியிலிருந்து முகாபேயை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் சர்வதேச சமுதாயம் தயங்கக்கூடாது என்றார்.

ஜிம்பாபுவே மக்கள் எதிர்நோக்கி வரும் பெரும் மனிதகுல நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அவைகளை நீக்குவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசுத்தலைவர் முகாபே நீக்கப்பட வேண்டும் என்று தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியா ஆங்கிலக்கன் ஆயர் ஜோ செயோக்கா கூறினார்.

ஜிம்பாபுவே மக்கள் பலவேளைகளில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்ற ஆயர், மக்களின் உண்மை நிலைகளைக் கண்டறியும் நோக்கில் குழு ஒன்றை தென்னாப்ரிக்க அரசு அனுப்ப வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

காலரா, பசிச்சாவுகள், எய்ட்ஸ், மருத்துவ வசதிகளின்மை, வீடுகள் வேலைவாய்ப்பு போன்றவையின்மை, இலஞ்ச ஊழல், ஆள்கடத்தல் போன்றவைகளால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஆங்கிலக்கன் ஆயர் செபஸ்டியான் பக்காரே, இத்தகைய நிலைகள் இறைவன் மீதான விசுவாசத்திற்குச் சவாலாக முடியும் எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.