2009-01-03 15:48:56

அனைத்து மோதல்களுக்கும் அடிப்படை காரணம் மனித மாண்பை மதிக்கப்படாததே- திருப்பீட உயர் அதிகாரி


ஜன.03,2009. புனித பூமியின் காஸா பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள வன்முறை உட்பட உலகில் இடம் பெறும் அனைத்து மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைவது மனித மாண்பை மதிக்காததே என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட சார்பு தினத்தாளான லொசர்வாத்தோரே ரொமானோவுக்குப் பேட்டியளித்த திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ எண்ணற்ற பொருளாதார மற்றும் சமூக அநீதிகள் வன்முறைக்குத் தூண்டுகோலாய் இருக்கின்றன என்றார்.

உலகின் இடம் பெறும் மோதல்களுக்குச் சமயப் பதட்ட நிலையும் ஓரளவு காரணம் என்றரைத்த கர்தினால் மர்த்தீனோ, காஸா பகுதியில் பல ஆண்டுகளாக மனித மாண்பு நசுக்கப்பட்டுள்ளது, சமூக மற்றும் பொருளாதார அநீதியில் வெறுப்பும் கொலைகளும் தீவிரவாதமும் தீவனங்களாக உள்ளன என்றும் கூறினார்.

புனித பூமியில் அமைதியைக் கொண்டு வருவதற்கு உரையாடல் மட்டுமே இயலக்கூடிய ஒரேவழி என்பதால் மத்திய கிழக்குப் பகுதியில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கர்தினால் தெரிவித்தார்.

இராணுவத்திற்கும் வளர்ச்சிக்கும் செலவிடப்படும் தொகையில் பெரும் வித்தியாசம் இருப்பதால் உரையாடலின் சக்தியிலும் மனிதரிலும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கர்தினால் மேலும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.