2009-01-03 15:50:20

2009ல் சீனக் கிறிஸ்தவர்களுக்கென பத்து இலட்சம் விவிலியப் பிரதிகளை அச்சடிக்கத் திட்டமிட்டுள்ளது டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழு


ஜன.03,2009. சீனாவில் கிறிஸ்தவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக பத்து இலட்சம் விவிலியப் பிரதிகளை அச்சடிப்பதற்கு டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழுவின் தலைவர் அருட்சகோதரர் அலாய் அறிவித்தார்.

பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய இளையோர் மாநாட்டில் இதனை அறிவித்த அருட்சகோதரர் அலாய், 2009ல் பல நிலைகளில் இவ்விவிலியப் பிரதிகள் விநியோகிக்கப்படும் என்றார்.

இறைவார்த்தை எல்லைகளைக் கடந்து நம்மை ஒன்று சேர்க்கும் என்றும் அம் மாநாட்டில் கலந்து கொண்ட ஏறத்தாழ நாற்பதாயிரம் இளையோரிடம் அவர் கூறினார்.

2009ம் ஆண்டில் சீனாவுக்கென 2 இலட்சம் முழு விவிலியப் பிரதிகளும் திருப்பாடல்களை உள்ளடக்கிய 8 இலட்சம் புதிய ஏற்பாட்டுப் பிரதிகளும் அச்சடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் போது இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸ்பானிய மொழியில் 10 இலட்சம், போர்த்துக்கீசியத்தில் 5 இலட்சம் புதிய ஏற்பாட்டுப் பிரதிகளை டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழு விநியோகித்தது. மேலும் 1989ல் இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சபைக்கென இரஷ்யத்தில் 10 இலட்சம் புதிய ஏற்பாட்டுப் பிரதிகளையும் இக்குழு அச்சடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.