2009-01-02 19:30:51

திருக்காட்சித் திருவிழா - 03 , ஜனவரி ,2009 .


மூன்று வெவ்வேறு வகையான பண்பாடுடைய மக்கள் இயேசுவோடு தொடர்புகொள்வதை நாம் இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் .



கிழக்கிலிருந்து வருகின்ற பயணியர் - பொதுவாக ஞானியர் அல்லது மூன்று இராஜாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையே பல கிலோமீட்டர் பாலைவனப் பயணக்களைப்போடு இயேசுவைத் தொடர்ந்து தேடி வருகின்றனர் . விண்மீன் மீது கண்களைப் பதித்துத் திக்குத் தெரியாத சூழலில் பயணம் மேற்கொண்டனர் . இந்த வியப்பூட்டும் பயணத்தின் முடிவாக அவர்கள் நம்பிக்கை மன நிறைவைத்தரக்கூடியதாக எதிர்பார்த்தது கிடைக்கின்றது . நம்பிக்கை வீண்போகாததால் , நம்பிக்கை நிறைவேறியதால் வியந்து மகிழ்ந்தார்கள் . அவர்கள் உற்றாரை மறந்து , வீட்டைத் துறந்து உறவுகளுக்கெல்லாம் மேலான மாபெரும் பேரன்பைத் தேடிச் சென்றார்கள் .



நாம் மன்னன் ஏரோதுவைக் காண்கிறோம் . அவன் இயேசுவை வேறு காரணங்களுக்காகத் தேடினான் . அவன் இயேசுவைத் தொலைத்துக் கட்டப் பார்த்தான் . அவன் இயேசுவைத் தேடிச் சென்று பார்க்க எண்ணமில்லாதிருந்தான் . அதனால் அவன் மற்றவரைப் பார்த்து வந்து அவனுக்கு செய்தியைத் தரும்படி ஆணையிட்டான் . அவனுடைய எண்ணங்கள் வெறுப்பும் பொறாமையுமாகும் . உண்மையாக ஏரோது தன்னைத் தான் தேடிக்கொண்டிருந்தான் . அவனுடைய அரசியல் , சமூகப் பாதையில் தடையாக வரும் இயேசு நீக்கப்படவேண்டும் .



பெத்லகேமின் மக்களையும் நாம் காண்கிறோம் . அவர்களில் ஆடுகளை மேய்த்த இடையர்களைத் தவிர மற்றவர்கள் இயேசுவின் பிறப்புப்பற்றி அக்கறையில்லாது இருந்தார்கள் . தங்கள் விடுதிகளில் தங்குவதற்கு இடம் தர மறுத்துவிட்டார்கள் . உலகமே எதிர்நோக்கியிருந்த குழந்தை அது . அதன் தாயை மகப்பேறு பார்க்கவேண்டிய கட்டத்தில் மலைப்பாங்கான பகுதிக்கு வெளியேற்றிவிட்டார்கள்.



இன்றும் இப்படிப்பட்ட மனநிலையுடைய மக்களை நாம் காண்கிறோம் . இன்று திருக்காட்சி விழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இன்றைய நிலைபற்றி அலசிப் பார்ப்பது நல்லது .



பலர் இயேசுவின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்களாக வாழ்வை முழுவதும் அவருக்காக அர்ப்பணமாக்கி உள்ளார்கள் . இவர்கள் பல கல் தூரம் கடுமையான பயணங்களை மேற்கொள்கிறார்கள் . அவர்கள் உற்றாரைத் துறந்து , ஊரைத் துறந்து பேரும் புகழும் வேண்டாது , தனக்கென சிலர் எதுவுமே வேண்டாது இயேசுவுக்காகவே வாழ்கிறார்கள் . அவர்கள் இயேசுவை தங்கள் இதயத்திலும் , இல்லத்திலும் , தங்கள் பணிகளிலும் காண்கிறார்கள் . அவர்கள் திருச்சபையின் வழிபாட்டிலும் , சந்திக்கும் மக்களிலும் இயேசுவைக் காண்கிறார்கள் .



ஏரோது மன்னனைப் போன்ற தன்னலவாதிகளும் இருக்கிறார்கள் . அவர்கள் மதங்களைத் தமது சொந்த லாபத்துக்கே பயன்படுத்துகிறார்கள் . மதம் அரசியலிலும் , வாணிபத்திலும் , சமூகத்தில் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கலாம் . அதற்குச் சரியான மதத்திலும் , திருச்சபையில் முக்கியமான கூட்டங்களிலும் கலந்துகொள்ள வேண்டும் . அவர்கள் வாழ்வில் கடவுள் குறுக்கிடக்கூடாது .



மற்றும் ஏராளமானோர் அற்புதமான , திகைக்க வைக்கும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டிருந்தும் , தெரிந்திருந்தும் , அவரைப்பற்றி அதிகம் சிந்திப்பதே இல்லை . அவரை ஒரு பொருட்டாகக் கருதுவதும் இல்லை . அவரைப்பற்றிய முன் அறிவிப்புக்கள் , அவர் தந்துள்ள உறுதி மொழிகள் ஆகியவற்றைக் கேட்டிருந்தும் கடவுளைப் பற்றியோ கிறிஸ்தவம் பற்றியோ , திருச்சபைபற்றியோ ஆராய்வதே இல்லை .



நம்முடைய நிலைமை என்ன . நீங்கள் போகும் பாணியில் செல்வதற்கு இயேசு தடையாக இருக்கிறாரா . நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி நினைப்பதுண்டா . அவரைப் பற்றி அதிகம் நினைப்பதில்லையா . நீங்கள் இக்காலத்தில் ஒரு ஞானியாக இருந்து இயேசு ஆண்டவரைக் கண்டுபிடிக்கும் வரை எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா .



பாசமுள்ள இயேசு அவரது மக்களை வெறுப்புக்களிலிருந்தும் , இருளிலிருந்தும் , மெத்தனப்போக்கு , புறக்கணிப்பு , அசட்டை மனப்பான்மை , கவனமின்மை , எழுச்சியற்ற தன்மை ஆகிய நிலைகளிலிருந்தும் தம்முடைய அருள்நிறைந்த ஒளிக்கு அழைக்கிறார் . அங்கு நாம் நமது பரிசுக்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக்கி வீடு திரும்புவோம் .








All the contents on this site are copyrighted ©.