2009-01-01 20:40:32

திருத்தந்தையின் புத்தாண்டு தின மூவேளை செபத்துக்குப் பின் உரை. 01,ஜனவரி.


தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கும் , வானொலி , தொலைக்காட்சி வழி நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்க்கும் திருத்தந்தை நல்லன அனைத்தும் , சமாதானமும் பெற்று மகிழப் புத்தாண்டு வாழ்த்துக்கூறினார் . வார்த்தையாக இருந்த கடவுள் மனித உருவில் மரியன்னையின் மகனாகப் பிறந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் இக்காலத்தில் நம்முடைய விசுவாசம் நம்பிக்கையை நமக்குத் தரவேண்டும் என்றார் திருத்தந்தை . வரவிருக்கும் காலமெல்லாம் முன்னதைவிட நலமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம் என மொழிந்தார் திருத்தந்தை .இது கடவுள் அருளால் , அதுவும் கடவுள் அருளால் மட்டுமே சாத்தியமாகும் என்றார் . வளமான பொருள் செல்வத்தில் அல்ல , பணத்தைப் பெருக்குவதில் அல்ல , நாம் முன்னைய நிலையைவிட நன்மக்களாக , பொறுப்புள்ளவர்களாக இருக்க ஆண்டவன் கருணை காட்டுவார் என்றார் திருத்தந்தை . இது நிஜமாகும், ஏனென்றால் கடவுள் தம் மகன் வழியாக நம்மோடு பேசியுள்ளார் .( எபி . 1, 2 ). தொடர்ந்து நற்செய்தி வழியாகவும் , நம் மனச்சான்று வழியாகவும் பேசிக்கொண்டிருக்கிறார் . இயேசுக் கிறிஸ்துவின் வழியாக உலகு அனைத்துக்கும் மீட்பு உண்டு . இது உலக வரலாற்றோடு இணைந்தது என்று உரைத்தார் . திருமகன் இயேசு வரலாற்றில் அமையின் வேந்தராக வருகிறார் எனக்கூறினார் . இப்புத்தாண்டில் ஏழ்மையை நீக்க உலக நாடுகளின் தலைவர்களும் குடிமக்களும் முயலுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . பல்வேறு மொழிகளில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை நீதியையும் , பிறரன்பையும் பெருகச் செய்து , மன்னிப்பு வழங்கி , சமாதானத்தையும் ஒப்புரவையும் வளர்க்குமாறு கேட்டுக் கொண்டார் . அனைவர்மேலும் ஆண்டவர் அருளைப் பொழிந்து எந்நாளும் காப்பாராக என்று நல்வாழ்த்துக் கூறி ஆசி வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.