2008-12-31 19:35:41

கலந்துரையாடலே போர் ஓய்ந்திட வழி என்கிறார் கர்தினால் மார்ட்டீனோ. 31 டிச.


திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி மன்றத்தின் தலைவர் மேதகு கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ திருப்பீட நாளிதழ் லொஸ்ஸர்வாத்தோரே ரொமானோவுக்கு வழங்கிய பேட்டி.பேட்டி கண்டவர் மரியோ போன்சி .



வேட்டுச் சத்தம் ஓயவேண்டும் . கலந்துரையாடுதல் தொடரவேண்டும் எனக் கர்தினால் மார்ட்டீனோ இன்றைய உலகில் நடந்துவரும் சண்டை நிறுத்தத்துக்கு வழி கூறினார் . போரைத்தொடுப்பதும் , எதிர்த் தாக்குதலும் மீண்டும் மீண்டும் சுருள்பிரச்சனையாகப் போரைத் தொடர்வதற்கு வழிசெய்வதாகக் கூறினார் . திருத்தந்தை அவருடைய உலக அமைதி நாளுக்கான செய்தியில் போர் நிறுத்தத்தையே வலியுறுத்தியுள்ளார் என்றார் கர்தினால் மார்ட்டீனோ . கலாச்சாரத்தையும் சமயத்தையும் இன்றைய உலகப் பிரச்சனைகளுக்குக் காரணம் எனக் கூறுவர் சிலர் . ஆனால் சமூக , மற்றும் பொருளாதார அநீதியே இன்றைய உலகப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றார் கர்தினால் . திருச்சபை வலியுறுத்தும் மனித மாண்பைப் பல நாடுகள் போற்றுவதில்லை என மேலும் தெரிவித்தார் கர்தினால் மார்ட்டீனோ .வத்திக்கான் திருப்பீடம் நீதிக்குக் குரல் கொடுப்பதால் சில நாடுகள் ஐ.நாடுகள் சபையில் வத்திக்கான் திருப்பீடத்துக்கு இடம் கொடுப்பதைத் தடுக்க முயற்சிகள் செய்தன . ஆனால் அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறவில்லை .மக்கள் தொகையைக் குறைப்பதற்கு கருச்சிதைவையும் , அல்லது சிலர் செலவைக் குறைப்பதற்கு கருணைச் சாவை வலியுறுத்துவதும் நடக்கிறது. இந்தத் தவறான போக்குக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வத்திக்கான் திருப்பீடத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம் . வத்திக்கான் திருப்பீடம் அழுத்தமாக இயற்கையின் விதிகளையும் கடவுளின் கட்டளைகளையும் கடைப்பிடிக்கக் கூறுகிறது என்றார் கர்தினால் மார்ட்டீனோ .

மேலும் திருச்சபை மனித மாண்புக்குரிய அனைத்து உரிமைகளும் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தி வருகிறது எனவும் கர்தினால் மார்ட்டீனோ கூறினார் . கலாச்சார , இன வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களையும் திருச்சபை பாதுகாக்க விரும்புகிறது என்றார் . தவறான பாலினப்போக்குகளைப் பின்பற்றுபவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதையும் திருச்சபை எதிர்ப்பதாகக் கர்தினால் கூறினார் . உணவுப் பற்றாக்குறையைப் போக்க உற்பத்தியைப் பெருக்க வேண்டும் எனக் கூறினார் . சில நாடுகளின் அளவுக்கு மிஞ்சிய பொருள் உற்பத்தி காரணமாக விலையில் சரிவு ஏற்பட்டது. எனவே உற்பத்தியைக் குறைத்ததால் வேலை வாய்ப்பில்லாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் கர்தினால் கூறினார் . மனித மாண்பை மனதில் கொண்டு திருச்சபையின் சமூகக் கொள்கைகளைப் பின்பற்றினால் அமைதி நிலைக்கும் என கர்தினால் ரெனாட்டோ ரபயேலே மார்ட்டீனோ இன்றைய உலகச் சூழ்நிலை பற்றி வத்திக்கான் நாளிதழ் லொஸ்ஸர்வாத்தோரே ரொமானோவில் கருத்துத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.