2008-12-30 15:10:50

ஜனவரி 01, 2009 - 42வது உலக அமைதி தினம்

ஏழ்மைக்கெதிராகப் போராடி அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு உலகளாவிய ஒருமைப்பாடு அவசியம் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


வளர்ச்சிக்கு உதவவும், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள ஏழ்மைக்கு எதிராகப் போராடவும், உலகத் தாராளமயமாக்கலை சமாளிக்கவும் ஓர் இதயம் தேவை. ஒவ்வொன்றையும் அதனதன் வழியில் விடும் பொழுது தேவையில் இருப்போரின் பிரச்சனைகள் தீர்ந்ததாக இன்றைய அனுபவங்கள் உணர்த்தவில்லை. குறுகிய கால இலாபத்தை நோக்காத வருவாய்த் துறை தேவை. அனைத்திற்கும் மேலாக மிக முக்கியமானது என்னவெனில் வாழும் முறையிலும். உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளிலும் இன்றைய அதிகார அமைப்புகளிலும் மாற்றம் அவசியம்.

இவற்றை இரத்தின சுருக்கமாக 42வது உலக அமைதி தினத்திற்கானத் தமது செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி ஒன்றாந்தேதி சிறப்பிக்கப்பட்ட இத்தினத்திற்கென திருத்தந்தை வெளியிட்ட 17 பக்கங்கள் கொண்ட இச்செய்தி, அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு ஏழ்மைக்கெதிராகப் போராட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளது. ஏழ்மை என்பது பொருளாதார ஏழ்மை மட்டும் அல்ல, இது பணக்கார நாடுகளிலுள்ள மக்களுக்கு ஓரங்கட்டப்படுதல், நன்னெறி மற்றும் ஆன்மீக ஏழ்மையாகவும் இருக்கின்றது. ஏழ்மைக்கு, மக்கள் தொகை பெருக்கம் காரணம் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிலவேளைகளில் வாழ்வதற்கான உரிமையும் பெண்ணின் மாண்பும் மறுக்கப்படுகின்றன. ஏழ்மையை ஒழித்தல் என்ற பெயரில் இலட்சக்கணக்கான சிசுக்கள் கருவிலே கொல்லப்படுகின்றன. சொல்லப்போனால் 1981ல் உலக மக்கள் தொகையில் நாற்பது விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்தனர். இன்று இது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழ்மையின் ஒழுக்கநெறிக்கூறு ஆயுதக்களைவுக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான உறவையும் பாதிக்கிறது. இராணுவத்திற்கென பெருமளவில் செலவழிக்கப்படும் மனித வளமும் ஆயுதமும் தொகையும் மக்களுக்கான, குறிப்பாக அதிகத் தேவையில் இருக்கும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைத் திசை திருப்புகின்றன. இன்னும் இந்த ஏழ்மைக்கான போராட்டத்தில் உணவுப் பிரச்சனையும் முன்னுக்கு நிற்கின்றது. அத்துடன் ஏழ்மைக்கான காரணங்கள் உலக நாடுகளைச் சார்ந்தவை என்றால் உலகத் தாராளமயமாக்கலுக்கு, பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையேயும் தனிப்பட்ட நாடுகளுக்குள்ளேயும் ஓர் உறுதியான தோழமையுணர்வு அவசியம். உண்மையில் உலகத் தாராளமயமாக்கல் சில சில தடைகளை அகற்றி இருக்கின்றது, மக்களை ஒன்று சேர்க்கின்றது. இருந்தபோதிலும் இது உண்மையான ஒன்றிப்புக்கும் உறுதியான அமைதிக்கும் தேவையான சூழல்களை உருவாக்கவில்லை. தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடி குறுகிய காலத்தில் ஆதாயம் தேடும் வழிகளின் எதிர்மறை விளைவுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. எனவே இன்றைய தாராளமயமாக்கப்பட்ட உலகில், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரிய வளர்ச்சிக்கான வாய்ப்பை உறுதி செய்வதன் வழியாக மட்டுமே அமைதியை கட்டி எழுப்ப முடியும். பாலைவனத்தின் மத்தியிலோ அழியக்கூடிய இடத்திலோ ஆடம்பர வீட்டைக் கட்டுவது முற்றிலும் முட்டாள்தனமானது. உலகத் தாராளமயமாக்கல் தன்னிலே அமைதியைக் கட்டி எழுப்புவதற்குத் திறனற்றது. உண்மையில் பல விவகாரங்களில் பிரிவுகளையும் மோதல்களையுமே உருவாக்கியிருக்கின்றது. எனவே தாராளமயமாக்கல் ஏழ்மைக்கெதிரானப் போராட்டத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைய வேண்டும். நீதிக்கும் அமைதிக்கும் வழி அமைக்க வேண்டும்.

42வது உலக அமைதி தினத்திற்கான செய்தியில் திருத்தந்தை விடுத்துள்ள இவ்வழைப்பு உலகத் தலைவர்களின் செவிகளில் ஒலிக்கட்டும்.








All the contents on this site are copyrighted ©.