2008-12-30 10:39:24

அகில உலகக் குடும்பக்கருத்தரங்கு . 30 , டிசம்பர் .


குடும்பம் பற்றிய உலகின் 6 ஆவது கருத்தரங்கை மெக்சிக்கோ நகரில் நடத்தவுள்ளது வத்திக்கான் திருப்பீடத்தின் இல்லற வாழ்வுக்கான மன்றம் . வரும் ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து 18 வரை அங்கு நடக்கிறது. கருத்தரங்கின் மையக் கருத்தாக குடும்பம் என்பது கிறிஸ்தவ மற்றும் மனித மாண்பினைக் கற்றுத் தரும் கல்விக்கூடம் என்பது இருக்கும் . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கருத்தரங்கு இஸ்பானிய நாட்டின் வாலன்சியாவில் நடந்தது . குடும்பத்திலும் சமுதாயத்திலும் குடும்பங்களின் வளர்ச்சிக்கும், வளமான மாற்றத்துக்கும் உதவியாக இருக்க வத்திக்கான் திட்டமிடுகிறது . இந்தக் கருத்தரங்கில் அரசியலார் , பொது வாழ்வில் உள்ளோர் , மற்றும் இல்லத்தரசிகள் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள் . பொது வாழ்வில் உள்ளோர் பங்கேற்பது பயனுள்ளது என திருப்பீட இல்லற வாழ்வியல் மன்றத் தலைவர் கர்தினால் எண்ணியோ அந்தோனெல்லி கூறியுள்ளார் . மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் முதல் பகுதியில் பங்குத்தலங்களில் ஆற்றவேண்டிய பணி பற்றிய இறையியலும் , அடுத்ததாக குவாடலூப்பே மாதாவின் திருத்தலத்தில் ஒன்று கூடி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சாட்சியம் வழங்குவதும் , அங்குத் திருத்தந்தையின் குடும்ப வாழ்வு பற்றிய பதிவு செய்யப்பட்ட உரையை கேட்கவும் உள்ளனர் . மூன்றாவதாக, ஆடம்பரத் திருப்பலியில் வத்திக்கான் செயலர் தார்சீசியோ பெர்த்தோனே திருப்பலி நிகழ்த்தி கருத்தரங்கை முடித்து வைப்பார் . அதுபோது திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வத்திக்கானிலிருந்து வாழ்த்துக்களை தொலைக்காட்சி வழி வழங்கி ஏழாவது உலகக் குடும்பக் கருத்தரங்கு பற்றி அறிவிப்பு வழங்கி ஆசி வழங்கவுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.