2008-12-29 14:52:00

புனித பூமியில் முடிவில்லாமல் இடம் பெற்று வரும் இரத்தம் சிந்துதல் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த வருத்தம்


டிச.29,2008. இஸ்ரேல், காசாப் பகுதியில் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் மீது தொடர்ந்து கடும் தாக்குதல்களை நடத்தி வரும் வேளை, புனித பூமியில் முடிவில்லாமல் இடம் பெற்று வரும் இரத்தம் சிந்துதல் குறித்த தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை.

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய அவர், புனித பூமியில் இடம் பெற்று வரும் தாக்குதல்கள் மற்றும் பதிலடி தாக்குதல்களில் இறப்போர், காயமடைவோர், சொத்துக்களை இழப்போர் ஆகியோரின் கண்ணீரும் துன்பங்களும் தனக்கு மிகுந்த கவலையைக் கொடுப்பதாகக் கூறினார்.

இயேசுவின் தாயகம் இப்படி தொடர்ந்து முடிவில்லாமல் இரத்தக்களறிக்குச் சான்றாக இருக்கக்கூடாது என்றும் கூறிய திருத்தந்தை, இவ்வன்முறை அதன் எல்லா நிலையிலும் கண்டிக்கப்பட வேண்டும், இன்னும் இது நிறுத்தப்பட வேண்டும், காசாப் பகுதியில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.

இந்தச் சூழலுக்குப் பொறுப்பானவர்கள் மனிதாபிமானம் மற்றும் ஞானத்தை வெளிப்படுத்துமாறும், இஸ்ரேலியரும் பாலஸ்தீனியரும் இந்த வன்முறையிலிருந்து வெளிவர உதவுவதற்குச் சர்வதேச சமுதாயம் தனது முயற்சியைக் கைவிடக்கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஹமாஸ் அமைப்பின் காசா பகுதியின் பல இடங்களில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 280க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர், இன்னும் 600க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காசாவில் நடந்துவரும் வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஐ.நா. பாதுகாப்பு சபையும் கோரியுள்ளது








All the contents on this site are copyrighted ©.