2008-12-27 20:01:03

திருக்குடும்பப் பெருவிழா . 28 டிசம்பர் .


நற்செய்தி தூய லூக்கா 2 , 22- 40 .



சூசையப்பர் ,இயேசு , அன்னை மரியாள் , வாழ்ந்த குடும்பத்தைத் திருக்குடும்பம் என அழைக்கிறோம் . அவர்கள் குடும்பத்தை எடுத்துக்காட்டான குடும்பமாக நாம் கருதுகிறோம் . நாம் அவர்கள் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்ட நல்ல உறவில் வாழ்ந்ததாகக் கருதுகிறோம் . இயேசு கோவிலில் காணாமல் போனபோது குடும்பத்தில் சலசலப்பு வந்ததாக நாம் பார்க்க முடிகிறது .

நம்மால் பின்பற்ற முடியாத குடும்பம் என்று நாம் எண்ணத் தேவையில்லை . அவர்கள் குடும்பம் பல வகைகளில் நம் குடும்பங்களைப் போன்றதே . அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தார்கள் . சாதாரண பற்றாக்குறைப் பிரச்சனை அவர்களுக்கும் இருந்தது . அவர்கள் சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றாலும் கடவுள் விருப்பம் என்ன என்பதை சிரமப்பட்டுத்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அக்குடும்பம் புனிதமாக வாழ்ந்தது. வெற்றிகரமாக வாழ்ந்தது . குழந்தை இயேசுவை மூன்று முக்கிய வாழ்க்கை நிலையில் நன்கு பயிற்றுவித்தது. இறை ஞானத்திலும் , வயதிலும் , அருளிலும் இயேசு நல்ல வளர்ச்சி பெற்றார் . அந்த மூன்று பகுதிகளுமே நம் குடும்பங்களும் அவ்வாறு இருக்கின்றனவா என ஆய்வதற்கு உதவியாக இருக்கின்றன .



ஞானத்தை முதலில் பார்ப்போம் . பள்ளிக்கூடம் மட்டும் குழந்தைகளுக்கு வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்றுக்கொடுப்பதில்லை . பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு நல்லறிவைக் கற்றுக் கொடுப்பதோடு குடும்பங்களும் தொடர்ந்து குழந்தைகளுக்கு நல்ல பாடங்களைக் கற்றுத்தர துணை நிற்க வேண்டும் . பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் .அவர்களை நல்ல மதிப்பீடுகளில் பயிற்றுவிக்க வேண்டும் . மனிதன் குடும்பங்களில் பிறந்து அங்குத்தான் தன் வாழ்நாளின் இறுதி நாளையும் காண்கிறான் . தந்தை மக்களுக்குக் கற்றுத்தரும் பாடம் உலகுக்கு உடனடியாகத் தெரியாதிருக்கலாம் . ஆனால் ஒரு நாள் தெரிய வரும் . பெற்றோர்கள் குழந்தைகளின் பாடநூல்களைப் படித்து குழந்தைகளுக்கு விளக்கிக் கூற வேண்டும் . வீட்டுப் பாடங்களைச் செய்ய துணை நிற்க வேண்டும் . பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டும் . வகுப்பு ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசவேண்டும் . எந்த அளவுக்கு பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றார்களோ அதைப் பொறுத்திருக்கிறது குழந்தைகளின் கல்வி . குடும்பம் திருக்குடும்பமாக இருத்தல் வேண்டும் .



உடல் வளர்ச்சி - வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியின் பல நிலைகளை நல்ல முறையில் தெளிவுற விளக்கிக் கூறுதல் பெற்றோரின் கடமையாகும் . பாலியல் வளர்ச்சியும் மன நிலை வளர்ச்சியும் உணர்வுகளின் வளர்ச்சியும் நல்லமுறையில் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் . குழந்தைகள் வளர வளர பெற்றோரின் அனுபவங்களை நன்கு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் . பெற்றோரும் குழந்தைகளின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும் . நிபந்தனையில்லாத அன்பு பரிமாறப்படவேண்டும் . குழந்தைகள் எவ்வளவு வயதுடையவர்களாயினும் பெற்றோரைப் போற்றி மதிக்க வேண்டும் . இது ஆண்டவன் கட்டளை என்பதை மறந்துவிடக்கூடாது .





குடும்பம் என்பது ஒரு கோயில் . குழந்தைகளின் இறைப்பற்றுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் குடும்பமே பொறுப்பு . திருச்சபை குழந்தைகளுக்கு மறைக்கல்வியைக் கற்றுக்கொடுத்தாலும் பெற்றோரே நல்ல பண்பாடுகளில் கடவுள் நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும் . செபிக்க குடும்பம் நல்லதோர் இடமாகும் . செபங்களையும் விவிலியத்தின் அரிய மதிப்பீடுகளையும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் . குழந்தைகளின் வளரும் பருவத்தில் சமயக் கல்விக்கு நாம் கால அவகாசம் தரவேண்டும்.



குடும்பத்தில் எல்லோரும் ஒருவர் ஒருவரோடு அன்பிலும் சமாதானத்திலும் வாழ வேண்டும் . அளவிலாத அன்பையும் பாசத்தையும் தொடர்ந்து வழங்கவேண்டும் . குடும்பம் என்பது பூலோக வான்வீடாக அமைதல் வேண்டும் .பெற்றோர் சொல் மிக்க மந்திரமில்லை . அதேபோல பெற்றோர் மடியைவிட வேறு சுகமான படுக்கை உலகில் உண்டா . அம்மா அப்பா என்று அழைக்காத உயிரும் இல்லை அவர்களை வணங்காது உயர்வும் இல்லை . ஆதாம் அன்று ஏவாளைப் பார்த்து இவள் என் எலும்புகளின் எலும்பாய் என் தசைகளின் தசையாக இருக்கிறாள் என்று அன்புக் கீதம் பாடினார் . குடும்பம் முழுமையும் இதே உறவில் எலும்பின் எலும்பாக தசையின் தசையாக வாழ்வதே நல்லறம் . அன்பும் அறமும் நிலவவேண்டும் .



புத்தாண்டு பூத்துச் சிரிக்க உள்ளது . புத்துணர்வோடு புதுப்பொலிவோடு நாம் எடுக்கவுள்ள உறுதி மொழிகளில் நம் குடும்பங்கள் இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் போன்று ஞானத்திலும் , உடல் நலத்திலும் , இறைவனின் அனபிலும் அருளிலும் வளர சபதம் எடுப்போம் . குடும்பம் பல கலைகளின் கல்விக்கூடமாக அமைய ஆண்டவம் அருள் தருவாராக .



செபிப்போமா – எங்கள் வானகத்தந்தையே இறைவா , நாங்கள் இயேசு , மரி , சூசையப்பரின் திருக்குடும்பம் போல உம்மோடும் எல்லோருடனும் அன்புற்று மகிழ்ந்து வாழ அருள் தாரும் .








All the contents on this site are copyrighted ©.