2008-12-26 14:00:31

கென்யாவில் கடத்தப்பட்டுள்ள அருட்சகோதரிகள் விடுதலை செய்யப்பட திருத்தந்தை அழைப்பு


டிச.26.2008. கென்யாவில் கடத்தப்பட்டுள்ள அருட்சகோதரிகள் மரிய தெரேசா ஒலிவெரோ, கத்தரீனா ஜிரவ்தோ, இன்னும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்த அவ்வூர் பணியாளர் குழு விரைவில் விடுவிக்கப்படுமாறு இன்று நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

கென்யாவின் வடபகுதியின் எல் வாக் கிராமத்தில் அருட்தந்தை சார்லஸ் தெ போக்கால்டு தியானயோக மறைபோதக இயக்கத்தைச் சேர்ந்த இவ்விரு அருட்சகோதரிகளும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்த அவ்வூர் பணியாளர் குழுவும் நவம்பர் 9ம் தேதி கடத்தப்பட்டனர்.

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில்,உலகில் கடும் துன்பம் மற்றும் கடும் இன்னல் நிறைந்த சூழல்களில் வாழும் அனைவர் பற்றிய செய்திகள் மிகுந்த கவலை தருவதாக இருக்கின்றன என்ற திருத்தந்தை, கென்யாவில் கடத்தப்பட்டுள்ளவர்களுடனான தமது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

தனது அன்பை நமக்குக் கொடையாகக் கொடுப்பதற்காகப் பிறந்துள்ள இயேசு, மிகவும் ஏழ்மையில் வாழ்வோருக்குப் பணிசெய்த அச்சகோதரிகளைக் கடத்தியிருப்பவர்களின் இதயங்களைத் தொட்டு அவர்களின் விடுதலைக்கு வழிசெய்ய நாம் அனைவரும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் அவர்.

மேலும், அரசியல், இன்னும் பிற காரணங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதி, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் கடத்தப்பட்டுள்ள எண்ணற்ற மக்களை மறக்காது செபிக்குமாறும் கேட்டுள்ள திருத்தந்தை, இந்நேரத்தில் அவர்களுடனானத் தனது ஆன்மீகத் தோழமையையும் வெளிப்படுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.