2008-12-25 20:02:29

திருத்தந்தை கிறிஸ்துமஸ் விழாவன்று ஊருக்கும் உலகுக்கும் வழங்கிய வாழ்த்துச் செய்தி .25 ,டிசம்பர் .


கிறிஸ்துமஸ் விழா நாளில் பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பேதுரு பசிலிக்காவின் மையப்பகுதியில் உள்ள முகப்பிலிருந்து பல் வேறு மொழிகளில் திருத்தந்தை உரோமை வாழ் நகர மக்களுக்கும் உலகனைத்துக்கும் நல்வாக்கு மொழிந்தார் . இன்று நம் மீட்பராம் கடவுளின் அருள் அனைவருக்கும் தோன்றியுள்ளது என திருத்தூதர் பவுலை மேற்கோள்காட்டி தம் உரையைத் திருத்தந்தை தொடங்கினார் . அன்பிலும் நன்மைத்தனத்திலும் நிறைந்த இறை அருள் தோன்றியுள்ளது என மொழிந்தார் திருத்தந்தை . மனித உருவில் சீசர் அகஸ்துஸ் ஆட்சியில் பெத்லகேமில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றார் . கன்னிமரியின் மைந்தனாகப் பிறந்துதுள்ளார் . எனவே இறையருள் ஒளிரத் தோன்றிய அவர் நம்மை மீட்பவர் என்னும் பொருள்கொண்ட இயேசு என்ற பெயர் தாங்கி வருகிறார் என்றார் திருத்தந்தை . இறையருள் தோன்றியதால் கிறிஸ்துமஸ் ஒளியின் விழா . பெத்லகேமின் மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய ஒளி இருளை நீக்குகிறது . ஒவ்வொரு குடிலும் நம் இதயங்களை இந்த மறையுண்மைக்கு திறந்திடுமாறு அழைக்கிறது என்றார் திருத்தந்தை . முடிவில்லாதவர் மனித உருவில் முடிவைக் கொண்டவராகப் பிறந்துள்ளார். இந்தக் குடிலை இந்த வளாகத்திலும் எல்லாக் கோயில்களிலும், இடங்களிலும் காணலாம் என்றார் . இயேசு பாலனின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி, மீட்பர் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது . கடவுளின் மீட்பளிக்கும் அருள் தீமையை நன்மை தருவதாக மாற்றமுடியும் . மனித இதயங்களை மாற்றி அங்கு அமைதியின் சோலையை உருவாக்க முடியும் என்றார் திருத்தந்தை . இருளிலும் மரண நிழலிலும் வாழும் மக்கள் கடவுளின் மீட்பளிக்கும் அருளின் வல்லமையை உணர்வார்களாக என்றார் திருத்தந்தை . இந்த ஒளி ஜிம்பாப்வே , காங்கோ , கிவு , டார்பூர் , சோமாலியா நாடுகளிலும் , மற்றும் எங்கெல்லாம் குழந்தைகள் துன்புறுகிறார்களோ அங்கும் எதிர்காலத்தை நம்பிக்கையுள்ளதாக்க ஒளிரட்டும் என்றார் திருத்தந்தை . மனித மாண்பு மதிக்கப்படாத இடமெல்லாம் , பொதுநல நன்மைகளுக்கு எதிராக சுயநலம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் மீட்பரின் ஒளி ஒளிரட்டும் என்றார் திருத்தந்தை . ஒளியிலிருந்து ஒளியாக வந்துள்ள இயேசுவை நாம் ஆராதிப்போம் என்றார் திருத்தந்தை . தந்தையின் அன்பை நமக்குக் காட்ட , அமைதிக்கு நமக்கு வழிகாட்ட இயேசு அழைக்கிறார் . அவரது ஒளி நம் கவலைகளையும் அச்சத்தையும் போக்குவதாக எனக்கூறி எல்லோருக்கும் பல்வேறு மொழிகளில் , தமிழ் மொழியிலும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.