2008-12-22 16:43:30

திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கினார் திருத்தந்தை


டிச.22,2008 மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது என்ற புனித பவுலின் வார்த்தைகளுடன் இன்று திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கர்தினால் ஆஞ்சலோ சொதானோவின் தலைமையின் கீழ் திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை வழங்கிய பாப்பிறை, இவ்வாண்டு ஜூன் மாதம் 28ம் தேதி மாலை ரோம் புனித பவுல் பசிலிக்கா பேராலயத்தில் துவக்கி வைக்கப்பட்ட புனித பவுல் ஆண்டு பற்றியும் பேசினார்.

புனித பவுல் ஆண்டு என்பது அவரோடு தொடர்புடைய புனிதத் தலங்களுக்குத் திருப்பயணம் செய்வதற்கானது மட்டுமல்ல, அவரோடு இணைந்து இயேசுவை நோக்கிச் செல்வதற்கானது என்ற அவர், திருச்சபையை கிறிஸ்துவின் மறையுடல் எனும் போது புனித பவுல் திருச்சபை மற்றும் அதன் வாழும் சமுதாயத்தின் மீதான அன்பின்றி கிறிஸ்துவின் மீதான அன்பை செயல்படுத்த முடியாது என்பதை எடுத்துரைத்தார்.

இவ்வாண்டில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆகிய நாடுகளுக்கானத் திருப்பயணங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலிய இளையோர் தினக் கொண்டாட்டங்கள் பற்றிய தமது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.

இளையோரின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள அதிக அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இக்காலக் கட்டத்தில் உலக இளையோர் தினம் மிகச் சிறப்பான முறையில் வெற்றி கண்டுள்ளது குறித்தத் தமது மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

தூய ஆவியின் மகிழ்வை சிட்னி இளையோர் தினக்கொண்டாட்டங்களில் அபரிவிதமாகக் காண முடிந்தது எனவும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.