2008-12-17 15:42:41

திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் - வாழ்வின் மரத்தில் விண்மீனை சுடர்விடச் செய்யுங்கள்


டிச.17,2008. உலகின் மிக ஏழை நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்துகளுக்கு உதவுவதன் மூலம் வாழ்வின் மரத்தில் விண்மீனை சுடர்விடச் செய்யுங்கள் என்று திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் கர்தினால் ஹாவியர் லொசானோ பாராகான் அழைப்புவிடுத்தார்.

உலகில், பெரும்பாலும் ஆப்ரிக்காவிலுள்ள கத்தோலிக்க நலவாழ்வு மையங்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளைக் கொடுத்து உதவும் வத்திக்கான் நல்ல சமாரித்தான் அமைப்பிற்கும் தலைவராகிய கர்தினால் லொசானோ பாராகான், யாராவது பத்து யூரோக்கள் கொடுத்தால் அதனை கானா, நைஜீரியா, ஜிம்பாபுவே, சாம்பியா போன்ற உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அவர், 2008ல் இதுவரை ஒரு இலட்சத்து பத்தொன்பதாயிரம் டாலரை எய்ட்ஸ்க்கான மருந்துகள் வாங்குவதற்கென ஆப்ரிக்காவின் திருப்பீட தூதுவர்கள் வழியாக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.

கிறிஸ்துமஸ் தொடங்கி திருகாட்சி விழாவரை இந்நோக்கத்திற்காக மேலும் நிதியுதவிக்கு இந்த வத்திக்கான் நல்ல சமாரித்தான் அமைப்பு விண்ணப்பிக்கும் என்றும் கர்தினால் லொசானோ பாராகான் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.