2008-12-17 17:58:43

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . 17 , டிசம்பர் , 08 .


இங்கு உரோமையில் இரண்டு வாரங்களாகக் கொட்டிக்கொண்டிருந்தது மழை .இன்று பளிச்சென்றிருந்தது வானம் . திருப்பயணிகள் திருத்தந்தையின் மறைபோதகம் கேட்க முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் குழுமியிருந்தனர் . வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வரவேற்றார் .



நாம் இன்று கிறிஸ்துமஸ் விழாவுக்கு நவநாள் தயாரிப்பைத் தொடங்குகிறோம் . முற்காலத்தைய இறைவாக்கினர்களின் கடவுள் திருமகன் வருவார் என்ற முன்னறிவிப்புக்கள் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் கன்னிமரியின் மகனாகப் பிறந்த இயேசுவையே குறித்தன . கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் நற்செய்தி வழங்குகிறது .வாழ்வெனும் கொடைபற்றிப் பேசுகிறது . இவ்வாழ்வு எளிதில் அழியத் தக்கது . இருப்பினும் உலகைப் புதுப்பிக்க நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கைகளை நிறைவேற்றக் காத்திருக்கிறது கிறிஸ்துமஸ் . இப்பொழுது நிலவும் மிக்க துயரத்தைக் கொடுக்கும் பொருளாதாரச் சீர் குலைவு கிறிஸ்துமஸ் விழாவின் ஆன்மீக அர்த்தங்கள் பற்றி நம் கவனத்தைத் திருப்ப உதவியாக இருக்கும் . கடவுள் வருகையால் நமக்குக் கிடைத்துள்ள நம்பிக்கையை நம் உள்ளங்களில் வரவேற்க இப்பொருளாதாரப் பின்னடைவு துணையாக இருக்கும் . மனித உடல் எடுத்து மனுக்குலத்துக்கு மீட்பினைக் கொண்டுவரப் பிறந்த இறைவாக்கு நமக்குக் கடவுளின் கருணையால் நன் கொடையாகக் கிடைத்துள்ளது . உலகைப் படைத்த தெய்வம் , உலகுக்கு முழு அர்த்தமும் வழங்கும் தெய்வம் மனிதரிடையே குடி கொள்ள வந்திருக்கிறார் . அவர் நம்மோடு பேசுகிறார் . மனித உரு எடுத்த தேவன் வாழ்வின் ஆழ்ந்த அர்த்தம் பற்றிப் பேசுகிறார் . வாழ்வின் நிறைவாகிய அன்பினைப் பெற வழிகாட்டுகிறார் . குழந்தை இயேசுவில் கடவுள் நம் நெஞ்சத்தின் கதவுகளைத் தாழ்ச்சியோடு தட்டுகிறார் . நாம் அவருடைய அன்பையும் , அவர் தரும் உண்மையையும் , அவருடைய வாழ்வையும் இலவசமாக ஏற்றுக் கொள்ளுமாறு விழைகிறார் . கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் கடவுள் தந்துள்ள உறுதிமொழிகளில் நாம் நம் நம்பிக்கைகளைப் புதுப்பிப்போம் . மீட்பர் கொண்டு வரும் ஒளியையும் , மகிழ்ச்சியையும் , அமைதியையும் தாழ்ச்சியோடும் , எளிமையோடும் ஏற்றுக்கொள்வோம் என மறைபோதகம் வழங்கினார் . முடிவாக வந்திருந்தோருக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இறையருள் வேண்டி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.