2008-12-17 15:42:24

கிறிஸதவ முஸ்லீம் கூட்டம் - சமயத் தலைவர்களின் முதலும் முக்கியமுமான பொறுப்பு, சமய இயல்பு கொண்டது


டிச.17,2008. திருப்பீட பல்சமய உரையாடல் அவைக்கும், லிபியாவின் டிரிபோலியை மையமாகக் கொண்ட உலக இசுலாமிய அழைப்பு கழகத்துக்கும் இடையே வத்திக்கானில் நடைபெற்ற 11வது கலந்துரையாடலில் இன்று நிறைவு பெற்றது. இம்மூன்று நாள் கூட்டத்தின் முடிவில் இருதரப்பினரும் ஒத்திணங்கிய சில கூறுகளும் வெளியிடப்பட்டன. அவ்வறிக்கையில், சமயத் தலைவர்களின் முதலும் முக்கியமுமான பொறுப்பு, சமய இயல்பு கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

சமயத் தலைவர்கள், தங்கள் சமய மரபுகளை போதனைகள், நற்செயல்கள், எடுத்துக்காட்டான வாழ்வு ஆகியவற்றின் வழியாக நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் சமூகங்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி, அமைதி. சமூக நல்லிணக்கம், பொதுநலன் குறிப்பாக நலிந்தோர், தேவையில் இருப்போர், குடியேறிகள் ஒடுக்கப்பட்டோர் ஆகியவற்றோரின் நலன் உள்ளிட்ட அடிப்படை நன்னெறி மதிப்பீடுகளை வளர்ப்பதில் சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இளையோர் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், அதன்மூலம் அவர்கள் சமய தீவிரவாதம், இனவாதம் ஆகியவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம், இன்னும் சமயக் கலவரங்களைத் தடுக்கும் விதமாக சமயத் தலைவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும் வேண்டுமென அக்கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ட்ரிப்போலியில் அடுத்த கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தகைய கிறிஸதவ முஸ்லீம் கூட்டம் 1976ல் முதலில் ட்ரிப்போலியில் நடைபெற்றது.

இன்று நிறைவு பெற்ற இதில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கரிதினால் ஜான் லூயி தவ்ரான், அவ்வவையின் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா உட்பட 12 கத்தோலிக்கப் பிரமுகர்களும் 11 இசுலாமிய வல்லுனர்களும் கலந்து கொண்டனர்.

சமயப் பொறுப்புணர்வு, கலாச்சார-சமூக பொறுப்புணர்வுகள், பல்சமய உரையாடல் பாதையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் போன்ற தலைப்புகள் இதில் விவாதிக்கப்பட்டன.

 








All the contents on this site are copyrighted ©.