2008-12-17 17:48:51

எங்கே நிம்மதி - நாம் தோல்வி அடைவதற்கான காரணங்கள் என்ன . 17,டிசம்பர்


வில்மா ருடால்ப் சிறு குழந்தையாக இருந்தபோது போலியோ வியாதியால் கால் ஊனமானவள் . விடாமுயற்சியோடு முதலில் கம்பு ஊன்றி நடக்கவும் பின்னர் கம்பு இல்லாது நடக்கவும் முடிவாக மெல்பர்ன் மற்றும் ரோம் ஒலிம்பிக் ஓட்டத்தில் 3 தங்கங்களை வென்று வரலாற்றில் 3 ஒலிம்பிக் தங்கங்களை வென்ற பெண்மணியாகப் புகழ் சேர்த்தார் . அமெரிக்காவின் தலை சிறந்த வீராங்கனையாக பாராட்டப் பெற்றார் .

வெற்றி எப்பொழுதும் வெற்றி காணும் என்பதும் முழுமையான உண்மையல்ல . வெற்றி பெறுவதற்காக நாம் கடுமையாக உழைக்கிறோம் . நாம் தோல்வியையே பெற்றெடுக்கிறோம் . அலுவலகத்தில் சிலர் தலைமை அதிகாரிகளுக்கு எப்பொழுதும் தம் புகழைப் பாடிக்கொண்டே இருப்பார்கள் . ஆனால் தலைமை அதிகாரிகளோ அவர்கள் தொல்லை கொடுப்பதாக நினைத்து வெறுக்கலாம் . ஒரு ஆசிரியர் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணாக்கர்களைக் கவர நினைக்கலாம் . ஆனால் அவரது கடினமான பதங்களுக்கு அர்த்தம் புரியாத மாணவர்கள் அவரைப் புரிந்து கொள்ளாமல் போகலாம் .



தோல்வியுறுவதற்கு இன்னுமொரு காரணம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை . அதனால் தம்மைப் பெரியவராகக் காட்டிக்கொள்ள விரும்புவர் . எல்லாச் சமயத்திலும் தம்மை எல்லோரும் தலைவராகக் கருதவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள் . இவர்கள் புகழேந்திகளாக , தங்கள் புகழை எப்போதும் தாரை தம்பட்டத்தோடு பறைசாற்றுவதால் இவர்கள் தனியாகவே பவனி வருவார்கள் .



அழுக்காறு காரணமாகவும் நாம் நம் மகிழ்ச்சியை இழக்கிறோம் . பிறர் வெற்றி பெறுவதை நாம் பொறுக்கமுடியாமல் வயிற்றெரிச்சல் படுகிறோம் .

அடுத்த வீட்டுப்பையன் அமெரிக்காவுக்குப் போனால் நம் வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது .

இந்தத் தோல்விகளிலிருந்து தப்பிக்க வழி என்ன . நாம் யார் என்றும் வாழ்வில் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் ஆராயவேண்டும் . பெரிய தொழில் கூடங்கள் வெளியிலிருந்து கணக்குகளை ஆய்வு செய்ய ஆடிட்டர்கள் என்னும் ஆய்வாளர்களை அமர்த்தி கணக்குகளைச் சரிபார்ப்பது போல நாமும் நம் வாழ்வைச் சோதனையிட்டுப் பார்க்கவேண்டும் . இரண்டு வகையான உண்மைகள் உள்ளன . நமக்கு வெளியே காணப்படும் உண்மை . மற்றும் நமக்கு உள்ளேயே இருக்கும் உண்மை . நாம் பள்ளியிலோ , ஊடகங்கள் வழியாகவோ பெறக்கூடிய உண்மைகள் . அவை நம்மைப் பெரும்பாலும் பாதிப்பதில்லை . நமக்கு உள்ளே இருக்கும் உண்மை நேரமையாக நாம் யார் என்று நம் நெஞ்சம் கூறும் உண்மை .நம்முடைய தரக்குறைவான போக்குகள் , தவறான நடத்தைகள் போன்றவை நம் மனச்சான்று வழியாக நம்மை இனம் காட்டக்கூடும் . நம்முடைய பலவீனங்களை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது . நம் தப்புத்தாளங்களைப் புரிந்து கொண்டால் மாற்றத்துக்கும் வெற்றிக்கும் வழியுண்டு . சரியான வழிகளை நாம் தேர்வு செய்யலாம் .



நமமுடைய தான் என்னும் கர்வத்தை அடக்குவதற்கு நல்ல வழி கடவுளைப் பற்றிக்கொள்வதாகும் . நம்மால் எல்லாம் முடியும் கடவுள் தேவையில்லை என்பதும் , நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை ,கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பதும் தவறாகும் . நம்மால் முடிந்த அளவு திறமையாக ஒரு செயலைச் செய்தபிறகு கடவுளின் துணையை நாடவேண்டும் . வெற்றிபெற்றால் நன்றிக்கு அது வழியாகும் . தோல்வியடைந்தாலும் அதை இறைவனின் திட்டமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருப்போம் . தோல்வியாகத் தெரிவது வெற்றிக்கு ஒரு வழியாக இருக்கலாம் .பலரது வாழ்க்கையில் தோல்வி எனக் கணக்கிடப்பட்டது பெரிய வெற்றிக்கு ராஜபாதையாக அமைந்திருந்ததைப் பார்க்கிறோம் . கண்ணில்லாத ஊமையாக இருந்த ஹெலன் கெல்லர் போன்றவர்கள் அத்தகையோர்க்கு நாவும் செவிப்புலனும் பார்வையும் கொடுக்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்தார் .



செய்வதற்கு அரியது என்று அஞ்சக் கூடாது . நம் முயற்சியும் ஆண்டவன் அருளும் பெருமையைப் பெற்றுத்தரும் .








All the contents on this site are copyrighted ©.