2008-12-16 16:24:30

புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி – புனித பவுலின் நலம்தரும் போதனைகள்


டிச.15,2008. போதனைகள் மலிந்த காலம் இது. போதனைகளைத் தேடிப் போகிறவர்கள் பெருகி வரும் காலமும் இது. ஆங்காங்கே புதுப் புது சுவாமிஜிக்கள் ஆசிரமங்கள் அமைத்து போதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் ராஜாவும் ராஜூவும் நெருங்கிய நண்பர்கள். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையில் சேர்ந்தே அமர்வார்கள். சேர்ந்தே விளையாடுவார்கள். சேர்ந்தே படிப்பார்கள். மதிய உணவைப் பகிர்ந்தே உண்பார்கள். ஒருநாள் ராஜா தனது இனிய நண்பனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தான். பேச்சுவாக்கில் ராஜூவின் குடும்பம் பற்றி அறிந்து கொண்ட ராஜாவின் பெற்றோர் முகம் சுளித்தனர். தனது நண்பனை வழியனுப்பிவிட்டு வந்த ராஜாவிடம் அவனது பெற்றோர், தம்பி, நீ இனி அந்தப் பையனோட சேராதே என்று மாறி மாறி போதித்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாத ராஜாவுக்கு ஒரே திகைப்பு. பின்னர் அப்பாவிடம் காரணம் கேட்டான். அதற்கு அவனது அப்பா, ஏன்னா அவன் தாழ்ந்த ஜாதி என்றார். அம்மாவைப் பார்த்தான. ஆமா கண்ணா, அவுங்க சகவாசமே நமக்கு ஆகாது, ஏன்னா நாம் உயர்ந்த ஜாதி என்றாள். ஏம்மா, ஜாதியா? அப்படின்னா என்ன? என்று கேட்டுக் குழம்பினான். இன்றும் இத்தகைய முகம் சுளிக்க வைக்கும் செய்திகளைக் கேட்க முடிகிறது. இதற்காக எல்லாப் பெற்றோருமே இப்படித்தான் என்று சொல்லவரவில்லை. அன்பர்களே, பெரும்பாலான நமது அறிவுரைகள் அறிவில்லா உரைகளாகவே இருக்கின்றன. ஆனாலும் அந்த ஆறறிவு இல்லாத ராஜா வீட்டுக் கிளி அவன் பெற்றோரை எச்சரித்ததாம். எப்படி?

பரம்பரைக் குப்பைகளை பண்படுகின்ற குழந்தைகள் மீது கொட்டாதீர்கள்



புனித பவுல் தமது திருமுகங்களில் கணவன் மனைவியருக்கு, பெற்றோருக்கு, பிள்ளைகளுக்கு, தலைவர்களுக்கு, அடிமைகளுக்கு, பெண்களுக்கு எனப் பலதரப்பட்டவர்களுக்குச் சொல்லியுள்ள அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இன்றும் சில போதனைகளைக் கேட்போம்.

புனித பவுல் தமது திருமுகங்களில் இரண்டுவிதப் போதனைகள் பற்றிக் குறிப்படுகிறார். ஒன்று இவ்வுலகம் காட்டும் போதனை. மற்றொன்று இறைவன் காட்டும் போதனை. அவர் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12,2ல் “இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக” என்று சொல்லியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை மாலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் பல்கலைக்கழக மாணவர்களை வத்திக்கான் பசிலிக்காவில் சந்தித்து உரையாற்றிய போது, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தை வாசித்து தியானித்து அதன்படி நடக்குமாறு கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்கள் பெற்றுள்ள விசுவாசத்திற்கு மேலும் மேலும் உரமூட்டுவதற்கும் அதேசமயம் அவ்விசுவாசத்தைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்துவதற்கும் இத்திருமுகம் உதவும் என்று கூறினார்.

எனவே புனித பவுல் ஏறத்தாழ 1950 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கால உரோமை கிறிஸ்தவர்க்கு அறிவுரை சொன்னது போல நாம் இந்த உலகின் போக்கின்படி வாழ்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வாழ்வதால், அவர் கலாத்தியருக்கு எழுதியிருப்பது போல, ஊனியல்பின் செயல்களாகிய பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலிய எதிர்மறைப் பண்புகள் நம்மை ஆக்ரமித்துவிடும். நமது மனஅமைதியும் கெட்டு விடும்.

மாறாக நமக்கு மனஅமைதி தேவையெனில், பொருளாசையை விலக்கி வாழ வேண்டும், உள்ளதே போதும் என்றிருக்க வேண்டும்(எபி.13,5). இதையே புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமடலில் ( 6:10 )சொல்கிறார் :



பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்

மெய்யுணர்வைப் பல ஆண்டுகளாகத் தேடிய சித்தார்த்த கௌதமரும் இறுதியில் ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்றுணர்ந்தார். வள்ளுவரும், தூஉய்மை என்பது அவாஇன்மை, அதாவது மேலான புனித நிலை என்பது ஆசையை விடுகின்ற நிலையாகும் என்றார். உண்மைதான். பொருளாசையே, அறிவீனமான தீமையை விளைவிக்கக்கூடிய தீய நாட்டங்களில் விழுந்துவிடச் செய்கின்றது. சின்னத்திரை தொடர் ஒன்றில்கூட, பணப் பேராசை எவ்வளவு பெரிய தீமைகளில் விழ வைக்கின்றது, எத்தனை பேரை ஆழ்துயரில் ஆழ்த்துகின்றது என்பதைச் சுட்டிக் காட்டி வருகிறது. எனவே நாம் இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்( 1கொரி.15,19).

ஆக அன்பர்களே, நத்தால் கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கான இத்தயாரிப்பு காலத்தில் வாழுகிறோம். நமது வாழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும். நல்மாற்றம் அடைய வேண்டும். அதற்குப் புனித பவுல் சில டிப்ஸ்களைத் தருகிறார்.

தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காண முடியாது. காம இச்சை உணர்வு கசப்பான நச்சு வேர் என்கிறார் பவுல். எனவே நல்வாழ்விற்கு முதலில் தூய்மையான எண்ணமும் தூய்மையான செயலும் மிக முக்கியமானவை. முண்டாசு கவிஞரும் சொன்னார்- வாக்கினில் தூய்மை வேண்டும், மனதினிலே உறுதி வேண்டும் என்று.

அடுத்து கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அன்பு கொண்டு(எபே.5,2 )வாழ வேண்டும், ஏனெனில் தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது(உரோ.5,5)என்றும் பவுல் சொல்கிறார். இவரின் கூற்றுப்படி கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு மாறாக இருப்பது அன்பின்மையே. இந்த அவரது எண்ணம் அவர் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5,15இல் தெளிவாகிறது. பவுல் எச்சரிக்கிறார்-



நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

எனவே ஒருவரது நெறிகெட்ட தீயவாழ்வுக்கு கடவுளன்பும் பிறரன்பும் இல்லாமையே காரணம் என்பது பவுலின் ஆணித்தரமான கருத்து. அதனாலே அவர், உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது என்று வேத வசனத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்றும் ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் என்றும் சொல்கிறார். புனித பவுலின் கடிதங்களில் மணிமகுடமாக விளங்குவது அன்புக்கு அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு என்றால் அது மிகையாகாது.

இப்படிச் சொல்லும் பவுல் கிறிஸ்தவ நல்லொழுக்கமுள்ள வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. எனவே அதில் எதிர்நீச்சல் போடுவதற்கு நமது சொந்த சக்தி போதாது. அதனால் தூய ஆவிதரும் படைக்கலன்களை அணிந்து கொண்டு போராட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி மகுடத்தைப் பெறும் வாழ்வை வாழ முடியும் என்கிறார். படைக்கலன்கள் என்று அவர் குறிப்பிடுபவை ( எபே.6,13-17 )

உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து, அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும். மீட்பைத் தலைச்சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் தூயஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.

எம் அன்பு வானொலி நண்பர்களே, அன்பின்றி உலகம் அசையாது என்ற கூற்றைப் கிளிப்பிள்ளைப் பாடமாகப் பலமுறைக் கேட்டிருக்கிறோம். ஆனாலும் தன்னலமற்ற அன்பில் வாழ்பவர்கள் எத்தனை பேர்? இந்நாட்களில் கனமழையும் வெள்ளமும் குண்டு வெடிப்புக்களும் பலரைத் துயரத்தில் வீழ்த்தியிருக்கின்றன. நமது அன்புக் கரங்கள் பலருக்குத் தேவைப்படலாம். ஆன்றோர் சொல்வது போல, கொடுத்து கொடுத்து கைகள் தேய வேண்டுமே தவிர, பொருளை அபகரிப்பதில் தேயக் கூடாது. ஒரு மடங்கு உதவி செய்தால் அது பல மடங்கு பெருகும்.



மனிதன் மகானாவது மனித சுபாவத்தில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம். தன்னைப் பார்க்க ஆரம்பித்து விட்டவனுக்கு அடுத்தவரைப் பார்க்க ஏது நேரம்?



உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். நமது நினைவுகள் எல்லாம் உயர்வானதை பற்றியதாக இருக்கட்டும். நாம் தூயதை நோக்கி அடிஎடுத்து வைக்கும் போது கடவுளே கூறியிருக்கிறார் என்று புனித பவுல் கூறும் வசனம் நமக்கு ஆறுதலாக இருக்கட்டும்.



நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்













 








All the contents on this site are copyrighted ©.