2008-12-12 16:34:31

செயற்கை கருவுறுதல், கருவளத் திசுக்கள் பரிசோதனை, மனிதக் குளோனிங், கருவுறுதலைத் தடுக்கும் மாத்திரைகள் ஆகியவற்றைக் கண்டித்துள்ளது திருப்பீடம்


12டிச.,2008. மனித வாழ்வு அதன் ஒவ்வொரு நிலையிலும் புனிதமானது என்று சொல்லியுள்ள அதேவேளை, செயற்கை கருவுறுதல், கருவளத் திசுக்கள் பரிசோதனை, மனிதக் குளோனிங், கருவுறுதலைத் தடுக்கும் மாத்திரைகள் ஆகியவற்றைக் கண்டித்துள்ளது திருப்பீட ஏடு ஒன்று.

திக்னித்தாஸ் பெர்சோனே அதாவது மனிதனின் மாண்பு, மனித உயிர்சார்ந்த சில நன்னெறி கேள்விகளுக்கான அறிவுரைகள் என்ற தலைப்பில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தால் இன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 32 பக்க ஏட்டில், கர்ப்பப்பையில் முதிர்ந்த கரு தங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தடை செய்யும் ஆர்யு 486 என்ற மாத்திரையை எடுப்பது கருக்கலைப்பு என்ற பாவத்தின் கீழ் வருகின்றது, இது நன்னெறிக்குப் புறம்பான பெரும் பாதகச் செயல் என்று சாடியுள்ளது.

கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக வத்திக்கானில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள கருவுறுதல் அறிவியல் தொடர்புடைய இவ்வேடு, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

மனித வாழ்வு தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் அது மதிப்பதற்குத் தகுதி வாய்ந்தது, இந்த அடிப்படைக் கோட்பாடானது, மனித வாழ்வுக்கு ஆம் என்று சொல்வதன் வெளிப்பாடாக இருக்கின்றது, இது உயிரியல் மருத்துவம் பற்றிய ஆய்வில் நன்னெறிச் சிந்தனையின் மையமாக இருக்க வேண்டும், அதேசமயம் மனித வாழ்வு வெறும் திசுக்களின் கூட்டம் என்று ஒருபொழுதும் குறைத்து கணிக்கப்படக் கூடாது என்றும் இவ்வேடு எச்சரித்துள்ளது.

செயற்கை முறையில் கருவுறுதல், பொறுப்பான கருத்தாங்கலுக்கு மட்டுமே உண்மையிலேயே மதிப்புடைய தாம்பத்திய செயலுக்கு மாற்றாக இருப்பதால் இதுவும் தவிர்க்கப்பட வேண்டியது என்றும் இவ்வேடு கூறுகிறது.

திருச்சபை அறிவியல் முன்னேற்றங்களை மிகக் கவனமாகக் கவனித்து வருகிறது, அதற்கு ஆதரவும் அளிக்கிறது, ஆனால் அதில் நன்னெறிகள் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமென விரும்புகிறது என்றும் வத்திக்கான் ஏடு குறிப்பிடுகிறது.

மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே ஒரு கலப்பினத்தை உருவாக்க முனைவதும் உறுப்பு மாற்றுக்காக உறுப்புக்களைத் தயாரிப்பதும் நன்னெறிக்கு முரணானது என்றும் அது கூறுகிறது.

இவ்வேட்டை திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயச் செயலர் பேராயர் லூயிஸ் லதாரியா பெரர் சே.ச., திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் பேராயர் ரினோபிசிகெல்லா, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆயர் எலியோ ஸ்கிரேச்சா, ரோம் இயேசுவின் திருஇதய பல்கலைக்கழக உயிரியல் நன்னெறிப் பேராசிரியர் மரிய லூயிசா தி பியத்ரோ போன்றோர் அடங்கிய குழு இவ்வேட்டை வெளியிட்டது.

 








All the contents on this site are copyrighted ©.