2008-12-10 15:56:29

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . - 10, நவம்பர் ,08.


இன்று உரோமையில் மழையும் காற்றும் குளிருமாக இருக்கிறது. இருப்பினும் திருப்பயணிகள் திருத்தந்தையின் மறைபோதகத்துக்கு ஆர்வத்தோடு வந்திருந்தார்கள்.

இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் நடந்தது . வந்திருந்தோரைத் திருத்தந்தை வாஞ்சையோடு வரவேற்றார்.



இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் கூறிய கருத்துக்கள் பற்றி மறைபோதகம் வழங்கினார் .

திருச்சபையில் உள்ள அருட்சாதனங்கள் பற்றிய பவுலின் சிந்தனைகளைத் திருத்தந்தை தெளிவுபட எடுத்துக் கூறினார் .

திருமுழுக்கு என்பது ஆண்டவர் இயேசுவின் இறப்பிலும் உயிர்ப்பிலும் நாம் பங்கு பெறுவதாகும் . நாம் பாவத்துக்கு இறந்து கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வைத் தொடர கிறிஸ்துவோடு எழுப்பப்படுகிறோம் . புனிதப்படுத்தும் நீரால் கழுவப்பட்டு நாம் தூயோராக , இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி கிறிஸ்துவை அணிந்து கொள்கிறோம் . இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் ஒருவர் திருமுழுக்கு வழியாக புதுப்படைப்பாகிறார் . தூய ஆவியானவரால் புதுப்பிக்கப்படுகிறார். அதே தூய ஆவியால் கிறிஸ்துவின் மறை உடலில் உறுப்பினராகிறார் .

நற்கருணை அருட்சாதனம் வழியாக திருச்சபை ஊட்டமளிக்கும் திருவிருந்தைப் பெற்று வளர்ச்சியுறுகிறது.

இறுதி இராவுணவின்போது இயேசு அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, இறைபுகழ்கூறி, தம் சீடர்களுக்குக் கொடுத்து உண்ணவும் பருகவும் கூறியது போல , திருத்தூதர்கள் வழியாகக் கற்பிக்கப்பட்டபடி திருச்சபை தொடர்ந்து இதனைச் செய்துவருகிறது . இதனால் இயேசுவின் திருப்பாடுகள் நினைவுகூறப்பட்டு , கிறிஸ்து மீண்டும் வரும்போது கடவுளுடைய மக்களுக்கு கொடுக்கப்பட உள்ள வானக விருந்தினை தருவார் என எதிர்நோக்கியுள்ளனர்.







தேவ நற்கருணை கிறிஸ்துவுக்கும் அவரது மணமகளாகிய திருச்சபைக்கும் உள்ள உறவை முழுமையடையச் செய்கிறது. இந்த மறைபொருள் வழியாக கிறிஸ்தவ மணவாழ்வு பற்றியும் திருத்தூதர் பவுல் அவருடைய கருத்தைக் கூறுகிறார்.

இந்த மாபெரும் திருத்தூதருடைய போதகத்தைத் தியானிப்பதன் வழியாக திருச்சபையின்மீது நாம் கொண்டுள்ள அன்பு வளர்வதாக என்றும் , திருச்சபையின் வாழ்வு தரும் ஊற்றுகளிலிருந்து அருளை நாம் முகந்து கொள்வோமாக எனவும் திருத்தந்தை மறைபோதகம் வழங்கினார் .

இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் , குறிப்பாக பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பிறரன்புத் துறவியருக்கு கடவுளின் மகிழ்ச்சியையும் அமைதியையும் வேண்டி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.