2008-12-06 16:18:24

இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா இரண்டாம் அலெக்ஸி, நற்செய்தி மதிப்பீடுகளுக்குத் தைரியமாகக் குரல் கொடுத்தவர் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


டிச.06,2008. இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா இரண்டாம் அலெக்ஸி நேற்று இறைபதம் எய்தியை முன்னிட்டு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இரங்கல் செய்தியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.

பிதாப்பிதா இரண்டாம் அலெக்ஸி, நற்செய்தி மதிப்பீடுகளை ஊக்கப்படுத்தி வளர்ப்பதில் தைரியமுடன் செயல்பட்டவர் என்று அச்செய்தியில் பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரின் பிரிவால் வருந்தும் விசுவாசிகளுடன் தனது ஆன்மீக ரீதியிலான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

கடுமையான கருத்துக் கோட்பாடுகளினால் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளில் பலர் விசுவாசத்திற்காக்க் கொல்லப்பட்ட பின்னர் திருச்சபை மீண்டும் உயிர் பெற்று வருவதற்கு மறைந்த பிதாப்பிதா எடுத்துக் கொண்ட முயற்சிகளை மகிழ்வோடு அதில் நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மனித மற்றும் நற்செய்தி மதிப்பீடுகளைப் பாதுகாப்பதற்கு, குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பதற்கு பிதாப்பிதா அலெக்ஸி உறுதியுடன் போராடினார் என்று கூறியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த அவரின் அர்ப்பணமானது, மனித, சமூக, மற்றும் ஆன்மீகத்தில் உண்மையான முன்னேற்றத்தையும் அமைதியையும் கொண்டு வரும் என்ற தமது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

79 வயதாகும் பிதாப்பிதா இரண்டாம் அலெக்ஸி, 1990ம் ஆண்டிலிருந்து இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சபையின் தலைவராக இருந்தவர். மாஸ்கோவுக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் இவ்வெள்ளிக்கிழமை இறந்தார்.

மேலும், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர் உட்பட பல கத்தோலிக்கத் திருச்சபை பிரமுகர்கள், பிதாப்பிதாவின் இறப்புக்குத் தங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளார்கள்.








All the contents on this site are copyrighted ©.