2008-12-03 18:07:40

எங்கே நிம்மதி - மனக்குழப்பத்தை உண்டாக்குவது எப்படி ? .03,12,08 .


எதற்கும் குற்ற உணர்வு தேவையில்லை எனக் கூறிவிடுங்கள் .

நீங்கள் செய்யும் நன்மைகளுக்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு என்றும் செய்யும் தீமைகளுக்கு நீங்கள் பொறுப்பு அல்ல என்றும் கூறிவிடுங்கள் .நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டை எதிர்பாருங்கள் . ஆனால் உங்களிடம் உள்ள தீய பழக்கங்களுக்கு பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிமீது பழிசுமத்திவிடுங்கள் . உங்களைப் பள்ளியில் யாராவது முட்டாள் எனக்கூறினால் அதற்குக் நீங்கள் பணக்காரக்குடும்பத்தில் பிறக்காததே காரணம் எனக் கூறிவிடுங்கள் .

2 ஆவதாக மற்றவர்களுக்குத் தீர்ப்பு வழங்கக் கற்றுக் கொள்ளுங்கள் . உங்களிடம் குற்றம் ஏதும் இல்லை , பிழையே நீங்கள் செய்ததில்லை என நீங்கள் நல்லவர்களாகவே தங்களை நினைத்துக் கொண்டபிறகு மற்றவர்கள் மீது குற்றங்களைச் சுமத்துங்கள் . இது உங்கள் மனச் சாட்சியைச் சாகடிக்க நல்ல வழி . அதனால் நீங்கள் நல்லவர்கள் என்று நம்பி பகற் கனவுலகில் வாழ வழிகாட்டும் . உங்கள் குற்றங்கள் உங்களுக்கே இருட்டடிப்புச் செய்யப்படும் . தன்னெஞ்சு அறிவது பொய்யற்க என்று வள்ளுவர் சொன்னது உண்மைதான் . வள்ளுவரை நினைத்துக் கொண்டிருந்தால் மனம் போன போக்கில் வாழ்வது எப்படியாக்கும் . செய்தித் தாள்களிலும் மற்ற இதழ்களிலும் சண்டை , வம்பு , வெட்டு , குத்து , கொலை , வேட்டு போன்ற இழிவான செயல்களை அதிகமாகத்தேடிப் படியுங்கள் . அவர்களோடு உங்களை ஒப்பிடும்போது உங்களுக்கு நீங்களே நல்லவர்களாவீர்கள். உங்கள் குற்றமுள்ள நெஞ்சு குமுறுவதும் கேட்காமல் இருக்கும் .



யாரும் உங்களைப்பற்றிக் குறைகூறினால் உடனே பாம்பாகச் சீறுங்கள் . கோபத்தைக் கொட்டுங்கள் . அவர்கள் உங்களைப்பற்றிக்கூறியது உண்மைதான் எனத் தெரிந்தால் அவர்கள்மீது பழியைத்திருப்புங்கள் . மனைவி போன்ற சாதுக்களிடம் பைத்தியம் பிடித்தது போல வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுங்கள் . அவர்கள் பயந்து நடுங்க வேண்டும் .

அடுத்து இருப்பவர்மீது பழியைப் போட்டபிறகு ஆண்டவன்மீது பழிபோடத் தெரிந்து கொள்ளுங்கள் . உங்களுக்குக் போதை தலைக்கேறிவிட்டதைப் பார்த்து அவன் சிரித்துக் கொள்வான் . மதங்களை இழிவாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் . மதத் தலைவர்களோ , மதத்தின் உறுப்பினர்களோ புரியும் தவற்றுக்கு கடவுளையும் மதத்தையும் தூற்றுங்கள் . இறுதியாக கடவுளே இல்லை எனக் கூறிவிடுங்கள் . அப்பொழுதுதான் நீங்களே தெய்வமாகலாம் . உங்கள் பிரச்சனைக்கு அடுத்தவரைக் குறை கூறியது போல இப்பொழுது கடவுள்மீது பழியைப் போடுங்கள் .



நீங்கள் சிறியோராக இருந்தால் அதையும் இதையும் தூக்கிப்போட்டு உடையுங்கள் . இது அடுத்தவர்களுக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் உங்கள் மனத்தைக் கடினப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் . எல்லோரையும் நீங்கள் வெறுக்க ஆரம்பித்தால் பித்தம் தலைக்கேற உங்களை மதிக்காத எவரோடும் வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிடலாம் .



மன நல நிபுணரிடம் போக வேண்டியிருக்கும் . அவர் காசைக் கறந்துவிட்டு கவலைப்படவேணடாம் . வாராவாரம் வந்துவிட்டுப்போங்கள் எனச் சொல்லி உங்கள் கதையைக் கேட்டுவிட்டு பணத்தை வெட்டுங்கள் என்பார் . கடைசியில் நீங்கள் சலிப்படையும்போது உங்கள் மனவியாதிக்கு மருந்து இல்லை . தலையைத்தான் மாற்றவேண்டும் என்று கூடச் சொல்லிவிடுவார் . மாற்றுத்தலை பொறுத்தும் காலம் இன்னும் வந்தபாடில்லை .

கடவுளே இல்லை எனக்கூறிவிடுங்கள் . எதற்குக் கடவுளைத் தேவையில்லாமல் உதவிக்கு அழைக்க வேண்டும். நீங்கள் பாவமே செய்யாத அப்பாவி . பாவம் என்று ஒன்றும் கிடையாது என்ற கொள்கையிலேயே இருந்தால் மற்றவர்கள் எவ்வளவுதான் வைத்தியம் செய்தாலும் பைத்தியம் போகமாட்டாது . உங்கள் நடத்தையும் போக்கும் சரியில்லை என யாராவது சொன்னால் அதை உடனே நிறுத்திவிடுங்கள் . நானே கடவுள் எனக் கூறிவிடுங்கள் . நானே பிறந்தேன் . நானே வளர்ந்தேன் . எனக்கு நானே வேத வித்தகன் என்ற பாடத்தையே பாராயணம் செய்துகொள்ளுங்கள் . இப்பொழுது முழுப் பைத்தியமாக ஆகிவிட்டீர்கள் . மது , தூக்க மாத்திரைகள் அவை தொடக்ககாலத்தில் வேலை செய்யும் . பிறகு அவையும் கைவிட்டுவிடக்கூடியவைதான் . ஈதல் ,இரக்கம் காட்டுதல் , நோய்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல் என்பன உங்களுக்குத் தேவையில்லை . அவற்றைச் சான்றோர் தெரியாது பின்பற்றுகிறார்கள் .

இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் பாவமில்லாதவராக , வெள்ளை மனம் கொண்டவராக இருப்பதான பிரம்மையில் மன நோய் கொண்டவராக வாழலாம். மற்றவர்களைக் கெட்டவர்கள் என்றும் , தீயவர்கள் என்றும் நீங்கள் தீர்ப்புக்கூற முழுத் தகுதியுள்ளவராகிவிடுவீர்கள்.

இறுதியாக உங்கள் நோய் என்ன ? கோழைத்தனம் ! .

விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் . மன்னிக்கக் கற்றுக்கொள்ளவில்லையே . சிலுவையை ஊன்றுகோலாகத் தவறாகக் கருதுகிறீர்கள். மனிதர்கள் எவ்வளவு மதியை இழந்துவிடுகிறோம் பாருங்கள் . ஊன்றுகோல் நம்மைத் தாங்கிப்பிடிக்கும் . சிலுவையோ நம்மில் சாய்ந்துகொண்டு தாங்கச் சொல்வது .



என்ன மன நோயாளிகளாக விருப்பமா ? நிம்மதி பறந்தே போய்விடும் !.








All the contents on this site are copyrighted ©.