2008-12-02 14:54:42

நைஜீரிய கலவரங்களுக்கு சமயம் அல்ல, அரசியலே முக்கிய காரணம் - அந்நாட்டு பேராயர்


டிச.02,2008. நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரில் ஏற்பட்டுள்ள மதக்கலவரங்களுக்கு குறைந்தது 400 பேர் பலியாகியிருக்கும் வேளை, இதற்கு சமயம் அல்ல, அரசியலே முக்கிய காரணம் என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறினார்.

இக்கலவரங்கள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அபுஜா பேராயர் ஜான் ஒலோருன்ப்பேமி ஒனெய்க்கென், இவை கிறித்துவ மற்றும் முஸ்லீம்கள் கும்பல்களுக்கிடையே இடம் பெறும் மோதல்கள் என்று செய்தி அறிக்கைகள் வெளியாகின்ற போதிலும், இதற்கான உண்மையான காரணம் கொஞ்சம் சிக்கலானது என்றார்.

இது அரசியல் தொடர்புடையது, எனினும் நைஜீரியாவில் அரசியல்வாதிகள் தங்களின் செயல்களுக்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கைக் காண முடிகின்றது என்றும் அபுஜா பேராயர் கூறினார்.

தற்போதைய கலவரங்களுக்குக் காரணம், நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான தேர்தல் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

அரசியல் கட்சிகள் முற்றிலும் மதத்தைச் சார்ந்தவையாக இல்லாவிட்டாலும், சில இடங்களில் நடைபெறும் மோதல்கள் அக்கட்சி உறுப்பினர்களின் சமயக்கூறைப் பிரதிபலிக்கின்றன, இது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதிக்கும் கிறித்துவர்கள் அதிகம் வாழும் தெற்குப் பகுதிக்கும் இடையில் இந்த ஜோஸ் நகர் கலவரத்தில் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது என்றார் அவர்.

ஜோஸ் நகரில் உள்ளூர் தேர்தல் காரணமாக இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் வெடித்த கலவரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம்களின் மசூதிகள் தீக்கிரையாகின என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரங்களுக்கு அஞ்சி சுமார் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு ஓடி அரசு கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.










All the contents on this site are copyrighted ©.