2008-12-02 14:54:28

காங்கோவில் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வத்திக்கான் அதிகாரி அழைப்பு


டிச.02,2008. ஆப்ரிக்கக் குடியரசான காங்கோவில் நடைபெறும் கட்டவிழ்க்கபட்ட வன்முறைகளைக் கண்டித்துள்ள அதேவேளை, அவ்வன்முறைகள் நிறுத்தப்பட உடனடி நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமைகள் காக்கப்படவும் வத்திக்கான் அதிகாரி ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி மனித உரிமைகள் பற்றிய சிறப்பு அமர்வில் பேசிய போது இவ்வாறு கூறினார்.

மரணம், கற்பழிப்பு, சூறையாடல், படைக்கு கட்டாய ஆள் சேர்ப்பு புலம் பெயர்வோர் என மனிதர் தினமும் எதிர் நோக்கும் துன்பங்களை அறிய முடிகின்றது என்ற அவர், சர்வதேச சமுதாயம் இக்கொடுமைகளுக்கு முன்னர் மௌனம் காக்க முடியாது என்றார்.

காங்கோவின் கீவு பகுதியில் நடைபெறும் கட்டுக்கடங்காத வன்முறைகளைக் கண்டு திருப்பீடமும் மிகுந்த வருத்தமடைந்துள்ளது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.

சண்டையினால் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர், ஏறத்தாழ 20 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.