2008-12-02 14:53:25

2009 ஆம் ஆண்டு சர்வதேச வானியல் ஆண்டு - வத்திக்கானின் நடவடிக்கைகள்


டிச.02,2008. 2009 ஆம் ஆண்டு சர்வதேச வானியல் ஆண்டு என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளதை முன்னிட்டு வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் வருகிற ஆண்டில் பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய வானியல் நிபுணர் கலிலேயோ கலிலி 1609 ஆம் ஆண்டில் முதல் முறையாக வானியல் ஆய்வுக்கென தொலைநோக்குக் கருவியைப் பயன்படுத்தியதை நினைவுகூரும் வகையில் 2009ஆம் ஆண்டை சர்வதேச வானியல் ஆண்டு என்று சிறப்பிக்க வேண்டுமென்று 2007ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி 62வது ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 400ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சிறப்பிக்கப்படும் இச்சர்வ தேச ஆண்டு அதிகாரப்பூர்வமாக பாரிசில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவில் வருகிற ஜனவரி 15, 16 தேதிகளில் தொடங்கி வைக்கப்படும்.

வான்கோள்களின் ஆய்வியல்- மனித சமுதாயத்தின் அக்கறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பொதுவான தளம் என்ற தலைப்பில் ஜூன் 21 முதல் 26 வரை வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

2009, அக்டோபர் 15 முதல் 2010, ஜனவரி 15 வரை விண்கோள்கள் பற்றிய அருங்காட்சியகத்தையும் நடத்தவுள்ளது.








All the contents on this site are copyrighted ©.