2008-12-01 15:22:45

புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி – புனித பவுலின் மடல்களில் அடிமைகள்


டிச.01,2008. அந்த வேப்பமரத்தில் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவ்வழியே தினமும் பொதி சுமந்து செல்லும் கழுதையை கவனித்து வந்தன. ஒருநாள் முதல் காகம் மற்றதைப் பார்த்து, இந்தக் கழுதை மேல் உனக்கு இரக்கமே வரவில்லையா, எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே...ம்... என்று சொல்லி பெருமூச்சு விட்டது. அதற்கு மற்ற காகம், இதற்கு நாம் என்ன செய்ய முடியும், கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றது. ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று மீண்டும் கேட்டது அந்த முதல் காகம். தனது இறக்கைகளைக் கோதிக் கொண்டே அழுத்தமாய்ப் பதில் சொன்னது இரண்டாம் காகம். ஆமாம். குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அன்பர்களே, ஒருகாலத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டுவரப்பட்டு விலங்குகளைவிட மிகக் கேவலமாக நடத்தப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் குனிந்து கொண்டே இருந்தார்கள். ஆயினும் அவர்களை நிமிரச் செய்ய மார்ட்டின் லூத்தர் கிங் போன்றவர்கள் தோன்றினார்கள். எனினும் இந்த நவீன காலத்தில், அதுவும் உலக மனித உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிய பின்னரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், கொத்தடிமைகள், ஏழைகள் போன்றோர் நிமிர முடியாமல் மாண்புகள் இழந்து துன்புறுவதை நாம் கண்டு வருகிறோம். இன்று ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புனித பவுல் காலத்தில் யூத, கிரேக்க, உரோமைச் சட்டங்கள் அடிமை நிலையை அனுமதித்தன. அடிமைகளை சமுதாய அமைப்பின் தவிர்க்க முடியாத ஒரு கூறாக ஏற்றுக் கொண்டனர். பொருளாதாரம், பொது வாழ்வு ஆகியவற்றின் முதுகெலும்பாக அவர்கள் விளங்கினர். எனவே அன்று அடிமைகளே இல்லாத ஒரு சமுதாயத்தை புனித பவுலால், ஏன் வேறு எவராலும் கூட நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. இத்தகைய ஒரு சூழலில் பவுல் அடிமைகளுக்கு என்ன சொல்லியுள்ளார் எனப் பார்ப்போம்.

பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம், ஆறாம் அதிகாரம், வசனங்கள் 5 முதல் 9 வரை தலைவர்கள் அடிமைகளிடமும், அடிமைகள் தலைவர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்.

தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்

தலைவர்கள் அடிமைகளுக்கு மனித உரிமைகளை வழங்கி அவர்களை மனித நேயத்தோடும் மனித மாண்போடும் நடத்த வேண்டும் என்று பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். ஏனெனில் பவுலின் காலத்தில் அடிமைகள் பலர் தங்கள் தலைவர்களோடு சேர்ந்து கிறிஸ்தவர்களாக மாறினர். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் போன்று அடிமைகளும் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். கிறிஸ்தவர்களுக்குள் எக்காரணத்தைக் கொண்டும் பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்று பவுல் கலாத்தியர், கொலோசேயர், கொரிந்தியர் ஆகியோர்க்கு எழுதிய மடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக, அவர் கலாத்தியர் 3,28ல் சொல்கிறார்



இனி உங்களிடையே அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்

இருந்தபோதிலும் அவர் அடிமைகள் பற்றிக் குறிப்பிடும் போது சில கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏனெனில் பவுல் எழுதியிருக்கிறார்.

அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்.

அதேசமயம் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 7ம் அதிகாரத்தில், ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்நிலையிலேயே நிலைத்திருக்கட்டும் என்று சொல்கிறார்.

ஆக பவுல் அடிமை நிலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அதை அவர் அங்கீகரித்திருக்கிறார் என்று புரிகிறோம். இதற்கு காரணம் இல்லாமல் இருந்திருக்காது. இந்த முன்றாம் மில்லேனேயத்திலும் தீண்டாமை, ஜாதிப்பாகுபாடு போன்றவற்றின் கொடுமைகளைப் பார்க்கிறோம். அப்படியானால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்று நாம் யூகிக்கலாம். அவர்கள் மனித மாண்பையும் அடிப்படை உரிமைகளையும் இழந்து தலைவர்களின் உடமைகளாக மாற்றப்பட்டிருந்தனர். பண்டைக்கால அநாகரிகங்களுள் அடிமை வாணிபமும் ஒன்றாக இருந்தது. யூதர்கள் தங்களது காலை மன்றாட்டின் போது தங்களைக் கடவுள் அடிமைகளாகக் படைக்காததற்கு நன்றி சொல்வார்களாம். இதை வைத்தே அடிமை நிலையின் குரூரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

பவுல் காலத்தில் சமுதாயச் சட்டங்கள் அடிமை நிலையை அனுமதித்தாலும் குடியுரிமை பெற்ற அடிமைகள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. காரணம் அடிமைகள் பெருமெண்ணிக்கையில் இருந்தனர். அதனால் குறைந்த கூலிக்கு ஆள் எடுப்பதற்குப் பஞ்சமும் ஏற்படவில்லை. எனவே உரிமை அடைந்தோரை வேலைக்கு அமர்த்த யாரும் முன்வரவில்லை. ஆகையால் உரிமை அடைந்தோர் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர் நோக்கினர். இதைப் பார்த்த மற்ற அடிமைகள் அடிமை நிலையிலேயே தொடர்ந்து இருக்க விரும்பினர். மேலும், அக்கால உரோமை அரசு, அடிமைகள் மட்டில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தது. அடிமைகள் பணம் செலுத்திக் குடியுரிமை பெறும் பொதுவான முறையை ஆதரித்தது. ஆனால் அடிமைகள் ஒன்றுகூடி கிளர்ச்சியில் ஈடுபடுவதையோ, போராட்டம் நடத்தி விடுதலை பெறும் முயற்சியில் இறங்குவதையோ அது அனுமதித்ததில்லை. அத்துடன் பவுலும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரும் என்று எதிர்பார்த்ததால் சமுதாய நிலை பற்றியோ புற விடுதலை பற்றியோ பெரிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர் ஒருவர் கிறிஸ்தவராக மாறிய போது எந்த நிலையில் இருந்தாரோ அந்த நிலையிலேயே தொடர்ந்து வாழுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது ஓர் அடிமை சமூக விடுதலை இன்றி கிறிஸ்துவில் உரிமைக் குடிமகனாக வாழ முடியும் என்று பவுல் கருதுகிறார்.



எனினும், அடிமை நிலையிருந்து விடுதலை பெற முடியுமானால் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனிதருக்கு அடிமையாக வேண்டாம் என்றும் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் கூறுகிறார். அக்காலத்தில் ஓர் அடிமை தன் தலைவனிடமிருந்து தப்பியோடி விட்டால் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்பது சட்டம். எனவே தப்பியோடிய எந்த அடிமையும் தம் தலைவரிடம் திரும்பி வருவதில்லை. தவறுகள் செய்துவிட்டு தப்பியோடிய ஒனேசிம் என்ற அடிமையை அவருடைய தலைவர் பிலமோன் மன்னித்து ஏற்குமாறு பவுல் பரிந்துரை செய்தார். அதுவும் அவ்வடிமையை, அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது அவருடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளவும் சொன்னார். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும்,அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன், அவன் நான் ஈன்றெடுத்த பிள்ளை என்றும் பவுல் எழுதி அனுப்பினார்.

எனவே பவுல் ஓர் அடிமையின் மறுவாழ்வுக்காகப் பரிந்துரைக்கிறார். பவுலுக்கு மனித உயிர், சட்டத்திற்கு முன்னர் ஒன்றுமில்லாததாகப்பட்டது. மொத்தத்தில் பவுல் புற விடுதலையைவிட அக விடுதலையைச் சிறந்ததாகக் கருதினார். ஒருவர் அடிமையாக இருந்தாலும் சரி, உரிமைக் குடிமகனாக இருந்தாலும் சரி, மக்கள் அனைவரும் ஒருவகையில் அடிமைகளே. அவர்கள் சாவு, பாவம், சட்டம் என்னும் வட்டத்திற்குள் சிக்கி அக விடுதலையின்றி வாழ்கின்றனர். எனவே எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரும் அக விடுதலை பெற்று தூய ஆவியில் வாழுமாறு பவுல் அறிவுரை வழங்குகிறார். ஏனெனில் பவுலே சொல்கிறார் - ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு என்று. மேலும் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் அன்பிற்கு அடிமைகள் என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் புனித பவுல்

எனவே நாம் எந்நிலையில் இருந்தாலும் அன்பிற்கே அடிமைகளாக வாழ வேண்டும். நமது வாழ்வின் இறுதி நாள் நமது அன்பு வாழ்வை வைத்தே தீர்ப்பிடப்படு்ம்.

ஓர் ஊரில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஒருநாள் எல்லோருக்கும் இன்பம் தரக்கூடிய பொருள் எது என்று அறிய ஆசைப்பட்டார். எனவே நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை வெளியிட்டார். நாட்டினர் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய பொருள் எது என்று ஒவ்வொருவரும் நினைப்பதை அரண்மனை கண்காட்சி மண்டபத்தில் வந்து வைக்கச் சொன்னார். அதற்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு தரப்படும் என்றும் அறிவித்தார். பல பொருட்கள் குவிந்தன. அவற்றை ஒவ்வொன்றாக அரசன் பார்வையிட்டான். குயிலைப் பார்த்த அவன், இதன் இசை எல்லாருக்கும் இன்பம் தந்தாலும் காது கேளாதவர்களால் இரசிக்க முடியாதே என்றான். பின்னர் அழகான மயில், தோகை விரித்து ஆடுவதைப் பார்த்தான். அப்போது பார்வையற்றவர்கள் நினைவு வந்தது. இப்படி பார்த்துக் கொண்டே சென்ற அரசனின் கண்களில் ஒரு களிமண் பொம்மை தென்பட்டது. பசியாக இருந்த ஒருவருக்கு ஓர் அம்மா இனிமையாகப் பேசிக் கொண்டே சோறு போடுகிற மாதிரி அது இருந்தது. அதுக்குக் கீழே அன்பு என்று எழுதியிருந்தது. அரசர் பளிச்சென்று ஓர் முடிவுக்கு வந்தவராகச் சொன்னார் - இவ்வுலகில் அன்பு ஒன்றுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்று.



அன்பர்களே, இந்த அன்பு இல்லாமையே அண்மை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட அனைத்து விதமான வன்முறைகளுக்கும் காரணம். திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, பிரச்சனைகளுக்கு வன்முறைகள் தீர்வாகக் கருதப்படாத ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு மக்கள் அன்பும் சாந்தமும் உள்ளவர்களாக இருக்குமாறு ஊக்கப்படுத்தினார்.

இந்தியாவின் மும்பையில் கொடூரமானப் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் எந்த வழிகளிலும் புண்பட்டுள்ள அனைவருக்கான செபத்தில் தானும் இணைவதாகக் கூறினார். RealAudioMP3 இத்தகைய செயல்களே, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கானத் தீர்வு என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருப்போரின் இதயங்களை இறைவன் தொட வேண்டும் என்று அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார். கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு விசுவாசிகள் அன்பும் சாந்தமும் நிறைந்த வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக இருக்குமாறு ஊக்கப்படுத்தினார். இன்னும் ஆப்ரிக்காவின் நைஜீரிய நாட்டு ஜோசில், தேர்தல் தொடர்புடைய மோதலில் வன்முறைக்கும் திருத்தந்தை தமது கண்டனத்தைத் தெரிவித்தார்.

எனவே அன்பர்களே, அன்பிற்கு அடிமைகளாக வாழ்வோம். பிறர் வாழ உதவுவோம். அன்பு செய்யும் கலையைக் கற்றவர் அனைத்தையும் சாதிக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.