2008-12-01 16:05:42

நாம் இறைவனுக்காக மிகக் குறைந்த நேரத்தைச் செலவழித்தாலும் அவர் நமக்காக என்றும் இருக்கிறார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


டிச.01,2008. நாம் இறைவனுக்காக மிகக் குறைந்த நேரத்தைச் செலவழித்தாலும் அவர் நமக்காக என்றும் இருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம் இறைவன் தம் படைப்புக்களுக்காக இருப்பது பற்றி விளக்கிய திருத்தந்தை, திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளில் நேரம் எனும் கொடை பற்றிய தமது சிந்தனைகளையும் வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வு பரபரப்பாக இருப்பதால் நேரமே இல்லை என்று நாம் சொல்கிறோம் என்றும் அவர் கூறினார்.

கடவுள் நமக்கு நேரத்தைக் கொடுத்துள்ளார், நம் ஆண்டவரைப் பொறுத்தமட்டில் அவரை அறிந்து கொள்வது எப்படி என்பது நமக்குத் தெரியவில்லை, சிலசமயங்களில் அவரை அறிந்து கொள்ள நாம் விரும்புவதில்லை, எனினும் அவர் நமக்காக நேரம் வைத்துள்ளார், இதனை அறிவிப்பதற்குத் திருச்சபை நற்செய்தியைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கம் இதனை புதிய வியப்போடு நாம் கண்டுணர வைக்கின்றது என்ற அவர், ஆம் கடவுள் அவரது நேரத்தை நமக்குத் தருகிறார், ஏனெனில் கடவுள் வரலாற்றை நித்தியத்திற்குத் திறப்பதற்காக, அதனை உடன்படிக்கை வரலாறாக மாற்றுவதற்காக, தமது திருவார்த்தையோடும் அவரது மீட்புப் பணிகளோடும் வரலாற்றில் நுழைந்துள்ளார் என்றார்.

இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது நேரம் என்பது ஏற்கனவே கடவுளன்பின் அடிப்படை அடையாளமாக இருக்கின்றது, இதனை மனிதன் போற்றுவதும் அல்லது அதற்கு மாறாக அதனை வீணடிப்பதும் அவன் கையில் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

திருவருகை காலம் நம் ஆண்டவரின் மகிமையான திருவருகையை விழிப்புடன் எதிர்பார்ப்பதற்கும் அத்துடன் கிறிஸ்துமஸ் அண்மித்து வரும் இவ்வேளையில் நம் மீட்புக்காக மனித உரு எடுத்த இறைவார்த்தையை வரவேற்பதற்கும் நமக்கு அழைப்புவிடுக்கிறது என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.