2008-11-29 14:57:23

மனிதன் தன்னை அறியாமலே இறைவனைத் தேடுகிறான் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


நவ.29,2008. இறைவார்த்தையாம் கிறிஸ்துவை அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ள குருத்துவ மாணவர்கள், திருமறைநூலில் கிறிஸ்துவை சந்திப்பதில் புனித பவுலின் பாதையைப் பின்பற்றி ஊக்கமுடன் செயல்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

இத்தாலியின் புலியேசே, கியத்தி, அங்க்கோனா ஆகிய இடங்களின் மாகாண பாப்பிறை குருத்துவ கல்லூரிகள் தொடங்கபட்டதன் 100ம் ஆண்டை முன்னிட்டு அக்கல்லூரிகளின் 420 பேரைத் திருப்பீடத்தில் இன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புனித பவுல் ஆண்டில் அப்புனிதரின் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தினார்.

புனித பவுலின் மனமாற்றம், அவர் புதிய ஞானத்தை வழங்கி திருச்சட்டம் இறைவாக்கினர்கள் பற்றிய உண்மையை புதிய வழியில் விளக்கவும் தனது விண்ணக போதகரைப் பின்பற்றி அனைவருடனும் உரையாடல் நடத்தவும் உதவியது என்றும் திருத்தந்தை கூறினார்.

இக்கால மனிதனுக்கு கிறிஸ்துவும் அவரது மீட்புச் செய்தியும் இன்னும் தேவைப்படுவதாக உணர்கிறானா என்ற கேள்வியைக் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம் என்ற திருத்தந்தை, இக்கால மனிதன், தனது கதிக்குத் தானே தலைவன் என்று உணர்வதால் தனது தீர்மானங்களிலும் செயல்களிலும் கடவுளை புறம்பாக்கிவிடுகிறான் என்றார்.

ஒவ்வொரு சகாப்த மனிதனைப் போன்று இம்மூன்றாம் மில்லேனேய மனிதனுக்கும் கடவுள் தேவைப்படுகிறார் என்ற திருத்தந்தை கிற்ஸ்தவர்கள், குறிப்பாக குருக்கள் உலகின் நம்பிக்கையாகிய கிறிஸ்துவை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.