2008-11-29 15:39:42

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனம்


நவ.29,2008. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இந்திய மற்றும் பாகிஸ்தானிய அரசுகள் அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்பட ஒன்று சேர்ந்து உழைக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து பாகிஸ்தானிய சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவரும் மத்திய சிறுபான்மை அமைச்சருமான ஷாபாஸ் பாட்டி ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய போது இந்த மிருகத்தனமான பயங்கரவாதத்தைத் தாங்கள் கடுமையாய்க் கண்டிப்பதாய்க் கூறினார்.

கத்தோலிக்கரான இவர், இத்தாக்குதல்களில் உறவுகளை இழந்து துயருறும் குடும்பங்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனை நடத்தியவர்கள் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படுமாறும் அவர் கூறினார்.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பின்னால் இருந்து செயல்பட்டிருக்கக் கூடும் என்ற குற்றச் சாட்டுக்கு மறுப்பும் இவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை நகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல், 62 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இறுதியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த தாஜ் மஹால் ஹோட்டலும் இன்று காலை மீட்கப்பட்டது. மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.இதுவரை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் 16 பாதுகாப்புப் படையினர் உள்பட சுமார் 200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் வெளிநாட்டவர்கள் 13 பேர். அவர்களில் ஐந்து இஸ்ரேலியர்கள், மூன்று ஜெர்மானியர்கள். ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். இன்னும் 370-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். அந்த மோதலில், கமாண்டோ படையைச் சேர்ந்த மேஜர் உன்னிகிருஷ்ணன் உயிரிழந்தார்.








All the contents on this site are copyrighted ©.