2008-11-26 16:04:51

பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படும் இளம் சிறாரைப் பாதுகாப்பதற்கு இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு நாடுகள் வலியுறுத்தல்


நவ.26.,2008. உலகில் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படும் இளம் சிறாரைப் பாதுகாப்பதற்கு இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, பாலியலுக்குப் பலியாகும் சிறார் குறித்த மூன்றாம் சர்வதேச மாநாட்டின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

பிரேசின் ரியோ தெ ஜனியோரோவில் அந்நாட்டு அரசும், யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பும் சிறார்க்கான சில அரசுசாரா அமைப்புகளும் இணைந்து இச்செவ்வாயன்று தொடங்கிய இவ்வுலக மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள் இவ்வாறு கூறினர்.

பாலியல் வன்முறை, பாலியலுக்குச் சிறார் பயன்படுத்தப்படுதல், சிறார் பாலியல் சுற்றுலா, சிறார் வியாபாரம், சிறாரைப் பாதிக்கும் பாலியல் படங்கள், இலக்கியங்கள் ஆகியவை வெறுக்கத்தக்க குற்றங்கள், இவற்றைக் களைவதற்கு மிகுந்த முயற்சிகள் தேவை என்றும் அம்மாநாட்டில் கூறப்பட்டது.

ஐ.நா.மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் 60ம் ஆண்டு கடைபிடிக்கப்படும் ஒரு சூழலில் நடைபெறும் இந்த நான்கு நாள் மாநாட்டில் ஐந்து கண்டங்களிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

உலகில் சுமார் 18 இலட்சம் சிறார் விபச்சாரத்திற்கும் பிற பாலியல் சார்பான செயல்களுக்கும் கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றனர். ஜெர்மனியில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3 இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.