2008-11-26 20:14:25

திருத்தந்தையின் மறைபோதகம் . 26 நவம்பர் ,08


இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் நடந்தது . இன்றைய மறைபோதகத்துக்கு முன்னர் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்துக்கும் , வத்திக்கானின் சில கட்டிடங்களுக்கும் சூரிய ஒளியால் மின் சக்தியைக் கொடுக்கும் எந்திர சாதனத்தைத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் திறந்து வைத்தார் . இது வத்திக்கான் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்கு 300 மெகா வாட் மின் சக்தி தர வல்லது .



இன்று மறைபோதகத்துக்கு வந்திருந்தவர்களை திருத்தந்தை வாஞ்சையோடு வரவேற்றார்.



இன்றும் திருத்தூதர் பவுலின் சிந்தனைகள் பற்றித் திருத்தந்தை மறைபோதகம் செய்தார் . இறைவனில் நாம் கொண்டுள்ள விசுவாசம் எனும் பற்றுறுதியும் நல்ல செயல்களும் எவ்வாறு நாம் இறைவன் முன்னிலையில் பாவம் கழுவப்பட்டவர்களாய் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வழிசெய்கின்றன என்று மறைபோதகம் செய்தார் . பவுல் அடிகளார் நாம் இறைவன் மீது கொண்டுள்ள விசுவாசத்தாலேயே மீட்புப் பெறுகிறோம் எனக் கூறுகிறார் . அதே சமயம் தூய ஆவியானவரால் தூண்டப்படும் நல்ல செயல்களுக்கும் இறைப்பற்றுக்கும் உள்ள தொடர்பையும் வலியுறுத்துகிறார் . ஆவியானவர் கொடுக்கும் முதற்கொடை தந்தையாகிய கடவுள்மீதும், அவரது மகனாகிய இயேசுவின்மீதும் நாம் காட்டும் அன்பு ஆகும் . இயேசுவின் அன்பில் பங்கு கொள்ளும் நாம் நமக்காக மட்டும் வாழ்வதில்லை . அவருக்காக வாழ்கிறோம் . நாம் புதுப்பிறப்பாகி திருச்சபை என்னும் அவருடைய உடலில் உறுப்பினர்கள் ஆகிறோம் . இவ்வாறு விசுவாசம் அன்பின் வழியாகச் செயல்படுகிறது . எனவே திருத்தூதர் பவுலும் தூய யாகப்பரும் நாம் விசுவாசத்தாலும் , அதன் வழியாக வரும் நற்செயல்களாலும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிறோம் என ஒருமித்த கருத்தைக் கூறுகின்றனர் . அவர்கள் கருத்துக்களில் எதிர்மறை எதுவும் இல்லை . கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம், நமது உடலில் அவரை மகிமைப்படுத்த அழைக்கப்படுகின்றோம் . இறைவனுக்குப் பிரியமான ஆன்மீகப் பலியாக நாம் நம்மையே காணிக்கையாக்க வேண்டும் . கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் என்னும் கொடையால் இறைவனுக்கு ஏற்புடையவர்களான நாம் , தனிப்பட்ட வாழ்விலும் , குழு வாழ்விலும் இந்த விசுவாசம் என்னும் கொடையைப் பாதுகாக்கவும் ,தூய ஆவியானவர் வழியாக நிறைவான பலன் தருமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும் . இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தவர்களையும் மற்றோரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.