2008-11-26 15:55:31

கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செயல்களில் தொடர்ந்து ஊக்கமுடன் ஈடுபட்டு வருவதற்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நன்றி தெரிவித்தார்


நவ.26.,2008. சிலிசியாவின் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருச்சபைத் தலைவரான கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செயல்களில் தொடர்ந்து ஊக்கமுடன் ஈடுபட்டு வருவதற்குத் தமது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்றைய புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம் அவரோடு வந்திருந்த அர்மேனிய சபை பிரதிநிதிகள் குழு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த அர்மேனியத் திருப்பயணிகளுக்கு நன்றி கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபைக்கும், கீழைரீதி ஆர்த்தோடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான இறையியல் உரையாடலுக்கான சர்வதேச குழுவில் கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரமின் பங்கேற்புக்கு நன்றி கூறினார்.

அர்மேனியத் திருச்சபையை ஆரம்பித்தவரும், நற்செய்தியில் நம் மூலமுதல்வர், தந்தை என அழைக்கப்படுபவருமான புனித கிரகரியின் திருவுருவம் வத்திக்கான் பசிலிக்காவின் வெளிப்புறத்திலுள்ளதைக் குறிப்பிட்டார் அவர்.

புனித கிரகரியின் திருவுருவம் இருப்பது, அர்மேனிய மக்களை கிறிஸ்தவத்திற்குக் கொண்டு வருவதில் அவர் எதிர் கொண்ட துன்பங்களையும் அத்துடன் அர்மேனிய மக்களின் வரலாற்றில் வளமையான சான்றுகள் பகர்ந்த பல மறைசாட்சிகளையும் மறைவல்லுனர்களையும் நினைக்க வைக்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

அர்மேனிய கலாச்சாரமும் ஆன்மீகமும் அந்நாட்டு முன்னோர்களின் சாட்சிய வாழ்வால் பெருமைக்குரியதாய் இருக்கின்றன என்றும் கூறிய திருத்தந்தை, நாம் அனைவரும் விரும்பும் ஒன்றிப்பை அடைய அன்னை மரியாவும் புனித கிரகரியும் உதவுவார்களாக என்றார்.








All the contents on this site are copyrighted ©.