2008-11-25 15:03:54

புருண்டியில் சண்டையில் பலியான சிறாருக்கு உதவிய பெண்ணுக்கு ஓப்புஸ் விருது


நவ.25,2008. புருண்டியின் இனச் சண்டையில் பலியான சிறாருக்குப் பாதுகாப்பான புகலிடம் வழங்கிய கத்தோலிக்கப் பெண் ஒருவருக்கு, சமூக விழிப்புணர்வுக்கான உலகின் மிகப் பெரிய மனிதாபிமான விருதான 10 இலட்சம் டாலர் மதிப்புடைய ஓப்புஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் நடத்தும் சியாட்டில் பல்கலைக்கழகமும், ஓப்புஸ் விருது நிறுவனமும் இணைந்து மார்கிரட் பாரன்கிட்சே என்பவருக்கு இவ்விருதை வழங்கியது.

1993 இல் துட்ஸி இனத்தவரின் கடும் தாக்குதலுக்குப் பின்னர் ஷலோம் என்ற இல்லத்தை ஆரம்பித்து 25 குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கத் தொடங்கினார் பாரன்கிட்சே. இந்த ஷலோம் நிறுவனம் வளர்ந்து இன்று 500 சிறு இல்லங்களாக அனாதைக் குழந்தைகளுக்குத் தஞ்சம் அளித்து வருகிறது. தற்சமயம் அது ஒரு மருத்துவமனையையும் தொடங்கியுள்ளது.

இந்த ஓப்புஸ் விருது, தமிழ் நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்துக்காக உழைத்து வரும் ஜெகன்நாதன் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு நிக்கராகுவாவில் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வறுமையிலிருந்து மீண்டுவர உதவி வரும் வுட்வார்டு என்பவரும் இவ்விருதைப் பெற்றுள்ளார்







All the contents on this site are copyrighted ©.