2008-11-24 15:55:37

மத்திய கிழக்கு பகுதிகளின் நிலை குறித்து திருத்தந்தை கவலை


நவ.24,2008. கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் ஈடுபட்டுள்ள நாடுகளில் வாழும் பல்வேறு இனக்குழுக்களும் மதத்தவரும் ஒருவர் ஒருவரை ஏற்று மதித்து வாழும் பொழுது மட்டுமே, தோழமையுணர்வு, நீதி மற்றும் தனிப்பட்ட மக்களின் சட்டரீதியான உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் மீது உறுதியான அடித்தளத்தைக் கொண்ட அமைதியைக் கட்டி எழுப்ப முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

சிலிசியாவின் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருச்சபைத் தலைவரான கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரமை திருப்பீடத்தில் இன்று சந்தித்த திருத்தந்தை, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிற பகுதிகளில் அண்மையில் கிறிஸ்தவர்க்கெதிராக இட்ம் பெற்றுள்ள வன்முறைகள் ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

லெபனன் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும் பதட்டநிலைகளும் வன்முறைகளும் அப்பகுதியில் அமைதிக்கும் ஒப்புரவுக்குமான அனைத்து முயற்சிகளையும் ஊக்கமிழக்க வைக்கின்றன என்ற கவலையையும் அவர் குறிப்பிட்டார்.

கீழைரீதி ஆர்த்தோடாக்ஸ் சபைகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்குமிடையேயான உரையாடல்கள், அர்மேனியப் பிரதிநிதிகளின் பங்கேற்பால் நல்ல பலனைத் தந்துள்ளன என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, கடந்த காலத்தில் இருசபைகளின் பிரிவினைகளுக்குக் காரணமாக அமைந்த இறையியல் குறித்த விவகாரங்களுக்கு இவ்வுரையாடல் விளக்கம் அளிப்பதாய் இருப்பதால் இவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற தமது ஆவலையும் தெரிவித்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் மூலம் மலர்ந்துள்ள புரிந்து கொள்ளுதலும், நன்மதிப்பும், ஒத்துழைப்பும் இக்காலத்தில் நற்செய்தி அறிவிப்பதற்கு உதவியாக இருக்கும் என்ற தமது நமபிக்கையையும் திருத்தந்தை தெரிவித்தார்.

புனித பவுல் ஆண்டில் கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரம் உரோமைக்கு மேற்கொண்டுள்ள திருப்பயணம் சிறப்புற அமையத் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டும் கத்தோலிக்கோஸ் முதலாம் ஆரமும் மற்ற பிரதிநிதி குழுக்களும் செப வழிபாடு ஒன்றையும் நடத்தினர்.








All the contents on this site are copyrighted ©.