2008-11-22 14:37:56

மரண தண்டனை சட்டத்தை உலக அளவில் தடை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முயற்சிக்கு சான் எஜிதியோ பாராட்டு


நவ.22,2008. மரண தண்டனை சட்டத்தை உலக அளவில் தடை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளது சான் எஜிதியோ என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் பிறரன்பு அமைப்பு.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை இரண்டாவது ஆண்டாக ஐ.நா.மனித உரிமைகள் அவை தடை செய்வதாக இவ்வாரத்தில் அறிவித்தது. இத்தீர்மானம் அடுத்த மாதத்தில் நடை பெறும் பொது அவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இத்தீர்மானம் முழு அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகுந்த முயற்சி செய்யவிருப்பதாக சான் எஜிதியோ அமைப்பு கூறியது.

நீதியின் ஒரு கருவியாக மரண தண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்காக கடந்த ஈராண்டுகளில் பல ஆப்ரிக்க மற்றும் மத்திய ஆசிய நாடுகள் அதிகமாக உழைத்திருக்கின்றன. கம்போடியா, ருவாண்டா, புருண்டி, தென்னாப்ரிக்கா போன்ற இனப்படுகொலை, நிறவெறிக் கோட்பாடு ஆகியவற்றின் கொடுமைகளை அனுபவித்த நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை இரத்து செய்துள்ளன என்றும் சான் எஜிதியோ கூறியது.

வாழ்வுக்கான நகரங்கள் - மரண தண்டனைக்கு எதிரான நகரங்கள் என்ற தலைப்பில் நவமபர் 30ம் தேதியன்று மரண தண்டனைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தைக் கடைபிடிக்கின்றது சான் எஜிதியோ அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.