2008-11-22 14:33:18

இறையரசில் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களாலும் ஒத்துழைப்பு வழங்க திருத்தந்தை அழைப்பு


நவ.22,2008. அன்பின் நீதியின், அமைதியின் இறையரசு வருவதற்கான பணியில் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களாலும் ஒத்துழைப்பு வழங்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்புவிடுத்தார்.

இத்தாலியின் அமால்பி-காவா தெ தெரெனி உயர்மறைமாவட்டத்தின் ஏறத்தாழ 3000 பேரை வத்திக்கானில் இன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அவர்களின் செபத்தை அதிகரிக்குமாறு கூறினார்.

இயேசு அழைத்த முதல் திருத்தூதரான புனித பெலவேந்திரரின் புனிதப் பொருள் கான்ஸ்ட்டாண்டிநோபிளிலிருந்து அமால்பிக்குக் கொண்டு வரப்பட்டதன் 800ஆம் ஆண்டை முன்னிட்டு தன்னைச் சந்தித்த அவர்களிடம், அழைப்பு, மறைப்பணி, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகியவை அவர்களின் ஆன்மீகப் பணியில் முக்கிய இடம் வகிக்க வேண்டும் என்றார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழா மற்றும் அன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையிலும் பேசிய அவர், இறைவன் வரலாற்றை அல்ல, மாறாக மனிதரின் இதயங்களை ஆளுவதற்கு விரும்புகிறார் என்றார்.

அகிலத்தின் அரசராகிய கடவுள், அவரது அரசில் பிரச்சனையை எதிர் நோக்கும் இடம் நமது இதயங்களைக் காண்கிறார் என்ற திருத்தந்தை, நம்மையே நாம் ஆளுவதற்கு நாம்தான் தடையாய் இருக்க முடியும், எனவே கிறிஸ்துவையும் அவரது தூதர்களையும் அல்லது சாத்தானையும் அவனது தோழர்களையும் தேர்ந்து கொள்வதும் நம்மைப் பொறுத்தது என்றார்.

நீதியை அன்பை மன்னிப்பை அல்லது அநீதியை, கோபத்தை வெறுப்பை அணைப்பது நம் ஒவ்வொருவரின் கையில் இருக்கின்றது என்ற திருத்தந்தை, சொல்லாலும் செயலாலும் கடவுளரசைக் கட்டி எழுப்பவும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.