2008-11-21 19:09:51

அகில உலக அமைதியையும் பாதுகாப்பையும் வேண்டுகிறார் பேராயர் மிலியோரே . 211108.


இம்மாதம் 19 ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா சபையின் உலகப் பாதுகாப்பு பற்றிய வாதம் நடந்தது . போருக்கான ஆயுதங்களைக் குறைப்பது பற்றியும் , அவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றியும் விவாதம் நடந்தது . அங்கு கருத்துப் பரிமாறிய திருப்பீடத்தின் ஐ.நாவுக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே ஐ.நாவின் பாதுகாப்புக்கான மன்றம் போருக்கான ஆயுதங்களைக் குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் . இந்த முயற்சி இன்னும் முழுமை பெறாததால் உணவுப் பொருள்களையும் , தங்கும் வசதியையும் , கல்வியையும் விட போர்கருவிகள் எளிதாகக் கிடைப்பதாக அவர் தெரிவித்தார் . பல கோடிப் பணம் போர்க்கருவிகளைத் தயாரிக்கச் செலவிடப்படுவதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார் . காங்கோ குடியரசில் இலட்சக்கணக்கானோர் நீதிக்காக , அமைதிக்காக , பாதுகாப்புக்காக , சொந்த மண்ணில் மாண்போடு வாழமுடியாது தவிப்பதை எடுத்துக் கூறி கவலை வெளியிட்டார் பேராயர் மிலியோரே . வத்திக்கான் திருப்பீடம் காங்கோவில் நடக்கும் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பேராயர் ஐ.நா சபையில் எடுத்துக் கூறினார் . ஐ.நா சபை அகில உலகும் ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்கான புது முயற்சிகளை எடுத்து குறிக்கோளை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.