2008-11-20 18:23:11

நூற்றாண்டு விழாக் கொண்டாடும் வத்திக்கான் துறவற சபை அமைப்பின் பிரதிநிதிகளை இந்த வியாழன் காலை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .20 ,நவம்பர் ,08 .


திருத்தந்தை 10 ஆவது பயஸ் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 இல் துறவியருக்கான வத்திக்கான் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் . இதன் நினைவாக துறவறச் சேவையின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 22 ஆம் தேதி துறவற சபை மன்றத்தின் பிரதிநிதிகள் கொண்டாட உள்ளனர் .வத்திக்கான் துறவற மன்றத்தின் பிரதிநிதிகள் தற்பொழுது உரோமையில் கருத்தரங்கில் உள்ளார்கள் . இன்று காலை இவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபோது தொடக்கத்தில் கர்தினால் பிராங்க் ரோட் திருத்தந்தைக்கு வாழ்த்துக் கூறினார் . நற்செய்தி காட்டும் படிப்பினையில் வாழ்வை அமைத்துக் கொண்டு துறவறச் சபையினர் வாழவும் , அப்போஸ்தலிக்கத் தொண்டில் ஈடுபடவும் துறவறச் சபைகளின் மன்றம் அவர்களை வழிநடத்துவதைத் திருத்தந்தை பாராட்டினார். துறவறச் சபைகளில் தங்களை கடவுளுக்காக முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர்கள் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் , இறைவனின் அழைப்புக்குச் செவிமடுத்து அதில் பிரமாணிக்கமாக வாழ்பவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார் . இந்த ஆண்டு இந்த மன்றம் தனித்து வாழும் துறவற மடங்கள் பற்றிக் கருத்தரங்கில் கருத்துப் பரிமாறிக்கொண்டனர் . மகளிர் துறவற சபைகள் பற்றியும் கருத்துப் பகிர்வதைத் திருத்தந்தை பாராட்டினார் . துறவற மடங்கள் ஆன்மீக வாழ்வுக்கான பாலைவனச் சோலைகள் எனக் கூறிய திருத்தந்தை, அங்கு அமைதியும் தியானமும் எப்பொழுதும் நிலவும் என்றார் . அனைவருக்கும் ஆண்டவர் ஆறுதல் தருமாறு வேண்டி தமது ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.