2008-11-19 13:53:01

உலக அமைதிக்காக உழைப்பதற்கு நாடுகள் முன்வர வேண்டும் – மதத்தலைவர்கள்


நவ.19,2008. உலக அமைதிக்காக உழைப்பதற்கு நாடுகள் முன்வர வேண்டும் என்று சைப்ரசில் நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான கூட்டத்தில் மதத்தலைவர்கள் அழைப்புவிடுத்தனர்.

இத்தாலியின் சான் எஜிதியோ பொதுநிலையினர் அமைப்பும் சைப்ரஸ் ஆர்த்தோடாக்ஸ் சபையும் இணைந்து நடத்திய கூட்டத்தின் இறுதியில் செய்தி வெளியிட்ட மதத்தலைவர்கள், தற்சமயம் உலகம், வரலாற்றில் மிக இக்கட்டான கட்டத்தில் இருக்கின்றது, பல உறுதிப்பாடுகள், உலகை ஆக்ரமித்துள்ள பொருளாதார நெருக்கடிகளால் ஆட்டம் கண்டுள்ளன, பலர் எதிர் காலம் குறித்து நம்பிக்கையின்றி இருக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் உலகின் மிக ஏழைநாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறும் அவ்வறிக்கையில், சண்டை, வறுமை மற்றும் வன்முறையால் எண்ணற்ற மக்கள் துன்புறுகின்றனர், யாரும் தங்கள் இதயத்தில் சுரக்கும் இரக்கத்தை அமுக்கிவிடக் கூடாது என்று சமயத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.

கடவுளின் பெயரால் சண்டைகள் பற்றிப் பேசுவது அர்த்தமற்றது மற்றும் அது தெய்வநிந்தனையாகும், நல்லதோர் சமுதாயம் பயங்கரவாதத்தாலும் வன்முறையாலும் சமைக்க முடியாது என்பதில் மதங்கள் உறுதியாக இருக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

உரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர்கள், சமுதாயத்தின் நல்லுணர்வுகள் சண்டையினால் அமுக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுள்ளனர்








All the contents on this site are copyrighted ©.