2008-11-19 18:19:20

திருத்தந்தையின் மறைபோதகம் – நவம்பர் , 19 .


குளிர் காலம் தொடங்கிவிட்டாலும் இதமான காலை நேரம் . இன்றைய மறைபோதகம் வழக்கம்போல உரோமை நேரம் காலை 10.30 மணிக்கு , இந்திய நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இருந்தது . வந்திருந்த அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்



இன்றும் திருத்தந்தை திருத்தூதர் பவுல் பற்றி மறைபோதகம் வழங்கினார் . நம் மீட்புப் பற்றிப் பவுல் அடிகளார் கூறுவதை விளக்கினார் . டமாஸ்கஸ் நகரம் செல்லும் வழியில் திருத்தூதர் பவுல் ஆண்டவர் இயேசுவால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டார். அந்த அழுத்தமான அனுபவம் நாம் கிறிஸ்துவின் அருளால் மட்டுமே மீட்புப் பெற முடியும் என பவுல் அடிகளாருக்குத் தெளிவுபடுத்தியது. நம் நல்ல செயல்களால் மட்டும் நாம் மீட்புப் பெற முடியாது . ஆண்டவன் அருள் வேண்டும் . கிறிஸ்துவின் சிலுவை என்ற மறை உண்மையால் வெளிப்படுத்தப்படும் , அவரால் நாம் மீட்படைகிறோம் என்பது கடவுள் தரும் இலவசக் கொடையாகும் . கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தார் . அவரே நமது ஞானம், நம்மை கடவுள் முன் ஏற்புடையவர்களாக்கியவர் அவரே . நம்முடைய மீட்பும் , நாம் புனிதமடைவதும் கிறிஸ்துவாலேயே . நாம் கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள பற்றுறுதியால் கடவுள்முன் ஏற்புடையவர்களாகியுள்ளோம் . சிலுவையின் ஒளியில் , சிலுவை தரும் ஒப்புரவின் கொடைகளில் , தூய ஆவியில் நாம் பெறும் கொடைகளில் அருள் வளத்தைக் கண்ட பவுல் அடிகளார் , யூதகுலச் சட்டங்கள் வழியாகப் பெறும் ஏற்புடைமையையும் , செயல்கள் வழியாக நாம் அடையும் ஏற்புடைமையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டார் . திருத்தூதர் பவுலுக்கு மோசேயின் வழிவந்த சட்டம் , இஸ்ராயேலுருக்குக் கொடுக்கப்பட்ட மாற்றமுடியாத மாபெரும் கொடை . அது நீக்கப்படவில்லை , ஆனால் அது கிறி்ஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் புது வாழ்வையும் , ஏற்புடைமையையும் தரக்கூடியதாகியுள்ளது . ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியுள்ளன . சட்டம் கிறிஸ்துவில் நிறைவினைக் கண்டுள்ளன . அவை கிறிஸ்து தந்த புதிய அன்புக்கட்டளையில் நிறைவு பெறுகின்றன . பவுல் அடிகளாரோடு இணைந்து நாம் கிறிஸ்துவின் சிலுவையில் பெருமை கொள்வோம் . கிறிஸ்துவின் திரு உடலாகிய திருச்சபையில் நாம் உறுப்பினர்கள் என்ற அருளுக்கு நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம் என நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறைபோதகம் வழங்கி , மறைபோதகத்துக்கு வருகை தந்த அகில உலக சாரணர் குழுவினருக்கும் , மற்றோருக்கும் வாழ்த்துக் கூறி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.